சென்னை: கடந்த 20ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ஆகியப்பகுதிகளில் இருந்து செயல்படும் ஜெயபாரத் பிளாஷ்வே சிட்டி, அன்னை பாரத் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமும், ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் எனப்படும் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே அரசு ஒப்பந்தங்களை செய்யும் நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமானவரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக இந்த இரண்டு குழுமங்களுக்குச்சொந்தமான 30 இடங்களுக்கும் மேலாக வருமானவரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகியப்பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகளின் முடிவில் அதிக அளவிலான முக்கிய ஆவணங்களும், டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஜெயபாரத் கிளாஸ்வே சிட்டி உள்ளிட்ட ரியல் எஸ்டேட் குழுமம் தொடர்பான சோதனையில் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அதிகளவு ரொக்கமாக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்று கணக்கில் வராத ரொக்கப் பரிமாற்றங்களை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தனியாக சாப்ட்வேர் பயன்படுத்தி கணக்குகளை கையாண்டதாகவும் அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் எனப்படும் அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பான சோதனையில் அதிக அளவிலான வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக போலியான சப் கான்ட்ராக்ட் செலவினங்களைக்காட்டி வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்துள்ளனர். சொந்தமாக போலி ரசீதுகளை தயாரித்து அரசு ஒப்பந்தங்களுக்குத் தேவையான கட்டுமானப் பொருட்களை வாங்கியது போல் கணக்கு காட்டி மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் போலியான சப் கான்ட்ராக்டர்களிடம் கொடுக்கப்பட்டு அதற்கு வங்கிகள் மூலம் பணம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்துள்ளதாகவும், அதன்பின் போலி சப் கான்ட்ராக்டர்களுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை தாங்களே மீண்டும் எடுத்துக்கொண்டு கணக்கில் காட்டாமல் வருமானத்தை சேர்த்து வைத்திருப்பதையும் அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த இரண்டு குழுமங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத வருமானம் 150 கோடி ரூபாய்க்கு மேல் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சோதனைகளின் முடிவில் 14 கோடி ரூபாய் அளவிலான ரொக்கமும், 10 கோடி ரூபாய் அளவிலான தங்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பைப் லைன் தோண்டும் பணியின்போது மண் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி பலி; உறவினர்கள் சாலை மறியல்