சென்னை: சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக தலைமை அலுவலத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறையில் மனு அளித்த நிலையிலும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விவகாரம் உட்கட்சி பிரச்னை. கட்சி அலுவலகத்திற்குள் நடந்த பிரச்னைக்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்'' என கேள்வி எழுப்பிய அவர், ''அலுவலகத்தின் உள்ளே பாதுகாப்பு அளிக்க முடியாது. வெளியே உரிய பாதுகாப்பு அளிக்கபட்டது’’ எனவும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''திமுக இரண்டாக பிரிவு பட்ட நேரத்தில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு, அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா போதிய பாதுகாப்பு அளித்தார்’ எனக்கூறினார். மீண்டும் பேசிய முதலமைச்சர், ''நாங்கள் பிரச்னை ஏற்பட்ட போது உங்களைப் போல் அடித்துக் கொள்ளவில்லை'' என்றார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”அதிமுக அலுவலகத்தில் வன்முறை வெறியாட்டம் யாரால் நடந்தபட்டது? யார் அத்துமீறி செயல்பட்டார்கள்? யார் வெறியாட்டத்தில் ஈடுபட்டார் என நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் நிராயுதபாணியாக இருந்தோம். கட்சியின் நுழைவு வாயில் பூட்டப்பட வேண்டிய அவசியம் என்ன?'' என பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
மேலும் பேசிய ஓபிஎஸ், ''நாங்கள் வருகின்ற போது 300 பேர் தலைமை அலுவலகத்திற்குப் பூட்டு போட்டு, சேர் போட்டு அமர்ந்தனர். ஒரு கும்பல் கல் வீசித் தாக்குதல் நடத்தியது. அன்றைக்கு நடந்த வன்முறை வெறியாட்டத்தை யார் நடத்தியது என்பதை காவல்துறை விசாரித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தினால் தான், யார் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிய வரும். அப்போது பொதுக்குழு கூட்டத்திற்கு செல்லாமல் எட்டு மாவட்டச் செயலாளர்கள் தலைமை அலுவலகத்தில் இருக்க வேண்டிய அவசியம் என்ன” என்றார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ''தக்க பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த சம்பவமே நடந்திருக்காது. திமுக அரசு தான் வழக்குப்பதிவு செய்தது. மேலும் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படுள்ளது. சம்பவத்திற்கு யார் காரணமானவர்கள் என்பது மக்களுக்கும் தெரியும். பொருட்கள் திருட்டும் நடைபெற்று உள்ளது'' எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ''காவல்துறை முறைப்படி பாதுகாப்பு அளித்தது. நீதிமன்றமும் விசாரணை நடத்தி 16 பேர் கைது செய்யப்பட்டு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. எனவே வேடிக்கை பார்த்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது'' என தெரிவிக்க விவாதம் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: நடிகர் அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக மனைவி அளித்த வழக்கு - ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு