சென்னை: பால் உற்பத்தியாளர்களுக்குச் சம்பந்தப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகத் தினந்தோறும் பாலின் தரம், அளவு அடிப்படையில் பாலுக்கான கட்டணம் வழங்கப்பட்டு வந்தது. பால் கொண்டு செல்வதில் முறைகேடுகள் நடப்பதால் அவற்றைத் தடுக்கவும், தரத்தைப் பரிசோதிக்கவும் வெளிப்படையான நடைமுறையைப் பரிந்துரைக்கும்படி ஒரு குழுவை அமைத்தது.
அந்த குழு அளித்த பரிந்துரைப்படி பாலின் தரம் குறித்த தரச் சோதனை மேற்கொண்டு, பால் உற்பத்தியாளருக்கு மின்னணு முறையில் தகவல் வழங்கி, உரியத் தொகையை வழங்கப்படும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்படும் எனப் பால் உற்பத்தி மற்றும் பால்வளத்துறை ஆணையர், 2016ம் ஆண்டு அறிவித்தார்.
இந்த புதிய நடைமுறை கடந்த ஆறு ஆண்டுகளாக அமல்படுத்தப்படாததால், மாவட்ட அளவில் பாலின் தரம் பரிசோதிக்கப்பட்டு, விலை வழங்கப்படும் எனப் பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதை எதிர்த்தும், அந்தந்த கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாகவே தினந்தோறும் பாலின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு விலையை வழங்க உத்தரவிட வேண்டுமென 2016ம் ஆண்டில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட அளவில் பால் தரம் பரிசோதிக்கப்பட்டு விலை வழங்கப்படும் என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இறுதி விசாரணைக்காக நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், புதிய தொழில்நுட்பத்தை அமல்படுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் 6 ஆண்டுகளாக அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதி அனிதா சுமந்த், வெளிப்படைத் தன்மையுடன் பரிசோதிக்கும் முறையை அமல்படுத்த வேண்டுமென்ற 2016ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வனப்பகுதிகளில் அன்னிய மரங்களை அகற்ற தனிக்குழு அமைக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு