சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம், சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற மென்பொறியாளர் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் ரயில் நிலையிங்களில் கண்கானிப்பு கேமராக்களை நிறுவி பாதுகாப்பை உறுதி படுத்திருக்க வேண்டும், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையைம் எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டங்களில் உள்ள முக்கிய பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்ளதாகவும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து, தமிழக அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ஏற்கனவே 35 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 407 ரயில் நிலையங்களில் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ரயில்வே துறை தரப்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினால் மட்டும் போதாது, அவை முறையாக, திறமையாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி, தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்தனர்.