சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் ராமர் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோல் மீது குற்றச்சாட்டு வைத்து சிபிஐ என்னை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது. ஆனால் என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியாமல் என்னிடம் சிபிஐ தோற்றுப் போனது.
இதனால் என்னிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் என்னிடம் தருவதற்கான விவாதம் நீதிமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. சிபிஐ என்னிடம் தோற்றுப் போனதால் சிபிஐ அதிகாரிகள் முக்கர்ஜி மற்றும் கதிரேசன் ஆகிய இரண்டு நபர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது.
அது மட்டுமில்லாமல் செவ்வாய்க்கிழமை விவாதம் முடிந்த பிறகு புதன்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மகள் நிஷாவிடம் என்னுடைய மூலிகை பெட்ரோல் ரகசியங்கள் அனைத்தையும் ஊடகம் முன்னிலையில் தர இருக்கிறேன். அப்போது, மூலிகை பெட்ரோல் குறித்து தொடக்கத்திலிருந்து இறுதிவரை முழுமையான விளக்கம் அளிக்கப்படும். மூலிகை பெட்ரோல் மூலம் அனைத்து வகை வாகனங்களையும் இயக்கலாம். இதனால் பாதிப்புகள் ஏற்படாது.
ஒரகடத்தில் உள்ள எனது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ள 40,000 லிட்டர் மூலிகை பெட்ரோல் ஒரு கோடி ரூபாய் லிட்டர் மூலப் பொருளையும் நிஷாவுடம் ஒப்படைக்க உள்ளேன். இது பயன்பாட்டிற்கு வந்தால் ஒரு லிட்டர் டீசல் ரூ.18-க்கும் பெட்ரோல் ரூ.14-க்கும் மக்களுக்கு சென்றடையும்.
இதில் வரும் வருவாயில் எனக்கு 50%, அவருக்கு 50% சதவீதம் என அனைத்தும் கையெழுத்திட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் மூலிகை பெட்ரோல் மூலம், சமையல் எரிவாயு உருவாக்க முடியும் அதற்கு கூடுதலாக 200 ரூபாய் மட்டுமே செலவாகும். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மூலிகை பெட்ரோல் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" என்றார்.
இதையும் படிங்க: மூலிகை பெட்ரோல்: கேரள தனியார் நிறுவனத்துடன் ராமர் பிள்ளை ஒப்பந்தம்!