சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தையொட்டி, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், சென்னை மாநகர் பகுதிகளை விட புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை வரை) தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. மேலும், வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 11 செ.மீ முதல் 12 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது. மேலும், கடந்த 6 நாட்களில் (நவ 1 முதல் 6 வரை), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 மீ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை 158 மீ.மீ மழை பதிவாகி உள்ளது.
இயல்பாக அக்டோபர் 1 முதல் நவம்பர் 6 வரையிலான காலகட்டத்தில், 220.1 மீமீ அளவு மழை பதிவாகும். ஆனால், தற்போது வரை பெய்த மழை அளவு இயல்பை விட 28 சதவீதம் குறைவாகப் பதிவாகி உள்ளது. மேலும், இன்றைய தேதியில் சராசரியாக 9.3 மீமீ அளவு பெய்து இருக்க வேண்டும். ஆனால் 4.4 மீமீ அளவில் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு: தென்காசி 12 செ.மீ மழையும், ஆய்க்குடி (தென்காசி) 10 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. அதேபோல் மதுரை மாவட்டம் எழுமலை பகுதியில் 9 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 7 செ.மீ மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 5 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
மேலும், ராஜபாளையம் (விருதுநகர்), சிவகிரி (தென்காசி), காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும், தேவகோட்டை (சிவகங்கை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, தருமபுரி, சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலான அளவில் மழை பெய்திருந்த நிலையில், நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!