திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நேமம் கிராமத்தில் அமைந்த கல்கி பகவான் ஆசிரமத்தில் 10 கார்களில் வந்த வருமானவரித் துறை அலுவலர்கள் குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். நேமம் கிராமத்தில் அமைந்துள்ள கல்கி பகவான் ஆசிரமம் பல ஆண்டு காலமாக இயங்கிவருகிறது. இந்த ஆசிரமத்தில் பலர் வெளியூர்களிலிருந்தும் வந்து தியானம் செய்து செல்கின்றனர்.
இந்த ஆசிரமத்தில் இன்று காலை 7.30 மணியளவில் அதிரடியாக உள்ளே புகுந்த வருமானவரித் துறையினர் கல்கி பகவான் நான்கு வாயில்களையும் பூட்டிவிட்டு உள்ளே யாரும் அனுமதிக்காமல் முழுவதுமாக ஆவணங்கள், ஒவ்வொரு பிரிவாக சோதனை மேற்கொண்டுவருகின்றனர். தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
சோதனை நடைபெறுவதால் கல்கி பகவான் ஆசிரமத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்தச் சோதனையில் கணக்கில் வராத 20 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, ஆப்பிரிக்காவில் முறைகேடாக நிலம் வாங்கியதாகவும் மேலும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
![கல்கி பகவான் ஆசிரமம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-trl-04-kalki-phagavan-incom-tax-raid-vis-scr-7204867_16102019161355_1610f_1571222635_1013.jpg)
வருமானவரித் துறையினர் திடீரென்று சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சாமியாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், இந்த ஆசிரமத்தை அவரது குடும்பத்தினர் நிர்வகித்துவருவதாகப் பேச்சு அடிபடுகிறது. தமிழ்நாட்டில் 40 இடங்களில் வருமானவரித் துறையினர் கல்கி பகவான் ஆசிரமத்தில் சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.