கரோனா தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மே-17 அன்று அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தமிழ்நாட்டில் 1,60,463 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டதில், புதிதாக 33,059 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 364 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது 2,42,929 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் அதிகபட்சமாக 6,016 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியக, கோவையில் 3,071 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,299 நபர்களுக்கும் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
திருவள்ளூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 21,362 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சிகிச்சைப் பலனின்றி சென்னையில் 85 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 37, திருவள்ளூரில் 28, கோவை, காஞ்சிபுரத்தில் 19 நபர்களும், மதுரையில் 15, சேலம், திருச்சியில் 16 நபர்களும் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் புதிதாக 520 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 91 நபர்களுக்கு எந்தவிதமான இணை நோய்களும் இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2248 ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 9,333 சாதாரண படுக்கைகளும், 425 ஐசியூ படுக்கை வசதிகளும் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல இடங்களில் மக்கள் படுக்கைகளைப் பெற திண்டாடும் சூழல் நிலவுகிறது.
ஆந்திரா, கர்நாடகம், பிகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிற்குள் சாலை வழியாக வந்தபோது சோதனை செய்ததில் 12 நபர்களுக்குக் கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நேற்று(மே17) 33,075 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது.
ஊரடங்கின் பயன் மெதுவாக தெரியத் தொடங்கியிருப்தாக ஈடிவி பாரத் ஊடகத்தினருக்கு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். தற்போது படுக்கைகளைப் பெறுவது, ஆக்ஸிஜனைப் பெறுவதில் பல்வேறு சவால்கள் உள்ளதை ஒப்புக்கொள்ளும் அவர், நிலைமையைச் சீராக்க தொற்று பாதிப்பு குறைவது மட்டுமே வழி என்றார். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.