சென்னை: சைதாப்பேட்டையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "தமிழ்நாட்டில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு இதுவரை 92,522 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி இறுதிக்குள் தமிழ்நாட்டில் 10 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தத் தகுதி பெறுவார்கள்.
இதில் தகுதி உடையவர்கள் உடனடியாக பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியைச் செலுத்திக் கொள்ள வேண்டும். இனி ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் தமிழ்நாட்டில் 600 இடங்களிலும், சென்னையில் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான சிறப்புத் தடுப்பூசி முகாம் நடைபெறும். சனிக்கிழமை அன்று வழக்கமான மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.
நோய்த் தொற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பரவல் அதிகமாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்காக ஏராளமானோர் கிராமத்துக்கும் சொந்த ஊருக்கும் சென்று உள்ளனர். அங்கு அவர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் பொது இடங்களில் கூடி கொண்டாடி இருப்பார்கள். எனவே கரோனா பாதிப்பு என்பது 3 நாட்களில் தெரியவரும்.
முதுகலை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான மருத்துவ கலந்தாய்வு குறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தீர்ப்பு தெரிந்தவுடன் கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். கரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் தொலைபேசி என்னைத் தவறாகக் கொடுப்பதும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் தொலைப்பேசி அழைப்புகளை எடுக்காமல் இருப்பதும் அவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் யாரையும் தடுப்பூசி போட வேண்டும் என கட்டாயப்படுத்தவில்லை. மத்திய அரசும் தடுப்பூசி போடச் சொல்லிக் கட்டாயப்படுத்தவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தடுப்பூசியைப் போடச்சொல்லி அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அறிவுரை வழங்குவதில் தவறு இல்லை.
மேலும், தமிழ்நாட்டில் ஒமைக்கரான் பாதிப்பு 85 சதவீதம் எனவும், டெல்டா பாதிப்பு 15 சதவீதம் எனவும் அறிவித்து வருகிறோம். மேலும் மரபணு மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிவதற்காக 1000 நபர்களுக்குப் பரிசோதனை செய்யும் போது குறிப்பிட்ட அளவில் பரிசோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதனடிப்படையில் தான் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒமைக்ரான் பாதிப்பு குறித்த விவரங்களைதனியாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம். இந்த விவரங்களை சரியாக பார்க்காதது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியன் தவறு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "அடுத்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உயரும் என்பதால் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறோம். மேலும் தமிழ்நாட்டில் நகர்ப்புறங்களில் பரவல் அதிகமாகவும், கிராமப்புறங்களில் குறைவாகவும் இருக்கிறது. இந்தியாவின் பாதிப்பை விட தமிழ்நாட்டில் தற்பொழுது வரை பாதிப்பு குறைவாகவே உள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடலூர் சத்திய ஞான சபையில் 6 கால தைப்பூச ஜோதி தரிசனம்...