சென்னை: தமிழ்நாட்டில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, உறுப்பு தானம் வேண்டி 6 ஆயிரத்து 250 பேர் காத்திருக்கின்றனர் எனவும், உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை செய்யப்படும் என அறிவித்த பின்னர் 30 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராமாபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன்: சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்ற இளைஞரின் உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்ற இளைஞர், கடந்த 11ஆம் தேதி விபத்தில் சிக்கி, தலையில் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சி.டி ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில், மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு (நவ.23), அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலுறுப்பு தானம்: இதனை அடுத்து மருத்துவர்கள், பார்த்திபனின் தாயார் மற்றும் அவரது உறவினர்களிடத்தில் உடலுறுப்பு தானம் குறித்து தெரிவித்தனர். பார்த்திபனின் தாயார், எனது மகன் உயிர் பிரிந்திருந்தாலும், அவனது உடலுறுப்புகள் மூலம் பலர் உயிர் வாழ்வது எனக்கு நிறைவைத் தருகிறது என்று கூறி உடலுறுப்பு தானத்திற்கு அனுமதித்திருக்கிறார். இதனை அடுத்து, பார்த்திபனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் மற்றும் தோல் ஆகியவை பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வரலாற்றிலேயே முதல்முறை: இதன் மூலம் பலர் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், உடலுறுப்பு தானம் நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி மூளைச்சாவு அடைந்து, உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உறவினர்கள் உடலுறுப்பு தானம் செய்து கொண்டிருக்கின்றனர்.
30 பேரின் உடலுறுப்புகள் தானம்: அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 30 நபர்களிடமிருந்து உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் 30 நபர்களின் உடலுறுப்புகள் தானம் என்பது இந்திய வரலாற்றில் மட்டுமல்லாமல், உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை. இந்த 30 பேரின் உடல்கள் எரித்தோ அல்லது புதைத்தோதான் இறுதி மரியாதை செய்யப்பட்டிருக்கும். எரித்தால் உடலுறுப்புகள் எரிந்து சாம்பலாகிவிடும்.
புதைத்தால் உடலுறுப்புகள் மண்ணோடு மக்கியிருக்கும். அப்படியில்லாமல், உடல் உறுப்புகளை தானம் செய்திருப்பது, பலர் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்திருக்கிறது. உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பிற்குப் பின்னர், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 315 பேர் உடலுறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 10 பேர் உடலுறுப்பு வேண்டி காத்திருக்கின்றனர்.
உடல் உறுப்பு தானம் வேண்டி காத்திருப்போர்: 6 ஆயிரத்து 250 பேர் சிறுநீரகம் வேண்டியும், 470 பேர் கல்லீரல் வேண்டியும், 81 பேர் இதயம் வேண்டியும், 69 பேர் நுரையீரல் வேண்டியும் காத்திருக்கின்றனர். இதேபோல் இதயமும், நுரையீரலும் வேண்டி 25 பேரும், கைகள் வேண்டி 26 பேரும், சிறுகுடல் வேண்டி 3 பேரும், சிறுநீரகமும், கல்லீரலும் வேண்டி 43 பேரும், சிறுநீரகமும், கணையமும் வேண்டி 42 பேரும், வயிறு வேண்டி ஒருவர் என்ற வகையில் மொத்தம் 7 ஆயிரத்து 10 பேர் உடலுறுப்புகள் வேண்டி காத்திருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடலுறுப்புகள் மூலம் பலர் உயிர் பிழைத்திருக்கின்றனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பார்த்திபனின் தாயார் என்னிடத்தில், எனது மகனின் உடலுறுப்புகள் பலருக்கு வாழ்வளிக்கும் என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சிதான் என்று கூறி, துக்கத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்களைத் தேடி.. உங்கள் ஊரில் - முதலமைச்சர் ஸ்டாலின் புதுத் திட்டம்!