சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2021ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்தது. இவ்வாறு திமுக ஆட்சி அமைத்து ஓராண்டு முடிவடைவதற்குள்ளாக, அதாவது 2022ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய அப்போதையை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், அதில் இருந்து விடுவிக்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதேநேரம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், முதல் முறையாக அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட்டன. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி திமுகவின் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டன. மேலும், சேகர் பாபு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட 10 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டு, சிலருக்கு கூடுதல் துறைகளும் ஒதுக்கப்பட்டன.
தற்போது வருகிற மே 7ஆம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகள், நிர்வாகத் திறன் குறித்து, உளவுத்துறை வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் சில மூத்த அமைச்சர்களிடம் போதிய நிர்வாகத் திறமை மற்றும் தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் இருப்பது, மக்களின் அதிருப்திக்கு ஆளாக இருப்பதும் தெரிய வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், துறை அதிகாரியிடம் சரிவர நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், நாசர், கயல்விழி, காந்தி உள்ளிட்டோரின் பெயர்களும், நிதித்துறை, சுகாதாரம், பள்ளிக்கல்வி, தொழில் உள்ளிட்ட துறை அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், புதிதாக டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், டாக்டர் எழிலன், அப்துல் வஹாப், தமிழரசி, உள்ளிட்ட ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட சில அமைச்சர்களின் இலாகா, அவர்களது தகுதி திறமையைப் பொறுத்து மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் திமுக தலைமையில் கிசுகிசுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும், அதிக சர்ச்சையில் சிக்கியதாக கருதப்படும் அமைச்சர்கள் நாசர் மற்றும் கயல்விழி ஆகியோரில் ஒருவர் பதவி இழக்க நேரிடலாம் என்றும், துணை முதலமைச்சர் பொறுப்பினை யார் வகிப்பது என்பது குறித்தும் கட்சி தலைமை அதிவேகமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இதையும் படிங்க: நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. பின்னணி என்ன?