குட்கா வழக்கில் இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்படவுள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குநரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தமிழகத்தில் விற்பனை செய்ததாக, குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் முருகன், மத்திய கலால்துறை அலுவலர் என்.கே.பாண்டியன், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் முருகன், மத்திய கலால்துறை அலுவலர் என்.கே.பாண்டியன், சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோருக்கு சிபிஐ முதன்மை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பின்னர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த சி.பி.ஐ முதன்மை நீதிமன்ற நீதிபதி திருநீலப்பிரசாத், தலா இரண்டு லட்சம் ரூபாய் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்கவேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் மூன்று பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
குட்கா வழக்கில் டெல்லி சிபிஐ அலுவலர்களால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் காவல்துறை இயக்குநர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இந்நிலையில், இரண்டாவது குற்றப்பத்திரிகை இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், அதில் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர், அமைச்சர் மற்றும் முக்கிய அலுவலர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய குட்கா வழக்கில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த நிலையில் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம் பெற்றால், அமைச்சரின் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது.