சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ஏா் இந்தியா விமானம் இன்று (நவ.7) காலை புறப்படத் தயாரானது. அதில் பயணம் செய்ய இருந்த பயணிகளிடம் விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாப் மாநிலத்தின் ஒரு தனியார் பள்ளியின் முதல்வர் செல்வராஜ் என்பவர் அந்த விமானத்தில் டெல்லி செல்வதற்காக வந்தார்.
அவரை அலுவலர்கள் சோதனை செய்த போது அவரது உடமைகள் பையின் அடியில் 9 mm ரகத் துப்பாக்கிக் குண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து துப்பாக்கி குண்டைப் பறிமுதல் செய்து விமான நிலைய காவல்துறையினர், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 8 மாதங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த ஒரு மாணவரை அவர் சோதனை செய்த போது மாணவனின் பையிலிருந்து அந்த குண்டு எடுக்கப்பட்டது. அதைப் பையில் போட்டு வைத்திருந்ததாகவும், தவறுதலாக எடுத்து வந்துவிட்டதாகவும் கூறினார்.
இதுகுறித்து பஞ்சாப் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பள்ளி மாணவனுக்குத் துப்பாக்கிக் குண்டு எப்படிக் கிடைத்தது, பறிமுதல் செய்யப்பட்ட குண்டை அப்போதே ஒப்படைக்காமல் சுமார் 8 மாதங்களாகப் பையில் போட்டுவைத்திருந்தது ஏன்? என்று பல்வேறு கோணங்களில் செல்வராஜிடம் விசாரணை நடக்கிறது.