சென்னை: சென்னை கிண்டியில் 6.8 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மைத்துறை பசுமை பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள உள்ளே மற்றும் பூங்காவிற்கு வெளியே அகலமான நடைபாதை, மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நறுமண தாவரங்கள், மூலிகைச் செடிகள் அமைக்கப்பட உள்ளன.
வண்ணத்துப்பூச்சி பூங்கா
பொதுமக்களைக் கவரும் வகையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க உத்தரவிட்டுள்ளது. பலவகையான மரங்கள், பூச்செடிகள், புல்வெளிகள் அமைத்து பூங்கா முழுவதும் பசுமையான சூழல் உருவாக்கப்படவுள்ளது.
3 தளங்கள் கொண்டதாக இப்பூங்கா அமைக்கப்படுகிறது. தரை தளத்தில் உணவு அருந்தும் இடம், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு அரங்குகள் மற்றும் பயிற்சி அரங்குகள் இடம் பெற உள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் சிறிய திரையரங்கம், உணவு பரிசோதிக்கும் கூடம், பூச்சி மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம், பூச்சிகள் அருங்காட்சியகம் அமையவுள்ளது. மூன்றாம் தளத்தில் அலுவலர்களுக்கான அறைகள் அமைக்கப்படுகின்றன.
இறுதிக்கட்ட பணிகள்
இயற்கை வேளாண்மை, காளான் வளர்ப்பு, கூரைத் தோட்டம் அமைப்பது, போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றிய நேரடி மாதிரிகள், செயல் விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மார்ச் மாதம் பணிகளை முடிக்கத் தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை