சென்னை: ஆத்தூர் அடுத்த அப்பம்மாசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட இராமநாயகன் பாளையம் கிராமம் காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்கள் 6.5 ஏக்கர் நிலம் வைத்துள்ளனர். ஆனால் இவர்களால், கடந்த 4 ஆண்டுகளாக அந்த நிலத்தில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. இதற்குக் காரணம் பாஜக நிர்வாகி குணசேகரன் என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கடிதத்தில், “விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.450 மட்டுமே உள்ளது. இது மட்டுமின்றி, இவர்கள் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் வரும் ரூ.1,000-ஐ வைத்துதான் வாழ்வை நடத்தி வருகிறார்.
மேலும் அமலாக்கத்துறை சார்பில், கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனில், சாதிப்பெயர் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்மனை அனுப்பியது அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் ரித்தேஷ் குமார். இந்த வழக்கையும் அவர்தான் விசாரித்து வருகிறார். மேலும் இவர்களைத் தொடர்ந்து பண மோசடி வழக்கில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான தங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டியதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவமானது, பாஜக தனது ஒரு ஆயுதமாக அமலாக்கத்துறையைக் கையாளுகிறது. இதற்கு பொறுப்பு ஏற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தற்போது, புதிய கடிதம் ஒன்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமானுக்கு ஐஆர்எஸ் அதிகாரி எழுதியுள்ளார். அதில், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேர்காணல் ஒன்றில் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 720 பாஜக மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். அதனால் எனக்கு யார் குணசேகரன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் 10ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். அவருக்கு ஆங்கிலம் தெரிய வாய்ப்பு இல்லை. அதனால் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத வாய்ப்பு இல்லை. இதனால் குணசேகரன் மற்றும் உதவி இயக்குநர் ரித்தேஷ் குமார் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
இந்த நிகழ்வில், மிகப்பெரிய பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. இதில் பாஜக குணசேகரன் இடைத்தரகர் மட்டுமே. அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் நிலம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. அதனால் அந்த இடத்தில் பன்னாட்டு நிறுவனம் அல்லது யோகா மையம் அல்லது கனிம வளங்களை எடுப்பதற்காக பாஜக நிறுவனங்கள் முயற்சிக்கலாம்.
எனவே, இந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும். சிபிஐ விசாரணை செய்தால் மட்டுமே, உண்மை வெளியே வர வாய்ப்புள்ளது" என ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீரென காங்கிரஸில் ஐக்கியமான ஒய்.எஸ்.ஷர்மிளா.. தெலங்கனா அரசியலில் நடப்பது என்ன?