தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், குழுப் பரிசோதனை முறையை மேற்கொள்ள அரசு முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பொறுப்பு அலுவலர்களுக்கு (Nodal officiers) சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ”ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தல்படி கரோனா பாதிப்பு 5 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருப்பூர், கரூர் நாமக்கல் உள்பட 21 மாவட்டங்களில் குழுப் பரிசோதனை (pooled test ) செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் முதல்நிலைப் பணியாளர்களான மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரிடமும், சந்தைகள், வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகள், தொழிற்சாலைப் பணியாளர்கள் ஆகியோரிடமும் இந்தக் குழுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குழுப் பரிசோதனை முறை என்பது 10 பேருடைய ரத்த மாதிரிகளைச் சேகரித்து ஒரே முறையில் பரிசோதனை செய்வது. இதன் மூலம் சோதனை முடிவில் தொற்று இல்லையெனில் அவர்களின் முடிவு ஒரே நேரத்தில் கிடைத்துவிடும். தொற்று இருக்கும் பட்சத்தில் மீண்டும் அவர்களுக்குத் தனித் தனியே பரிசோதனை செய்யப்படும்.
இந்தப் புதிய முறையால் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டுமெனில் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துவரும் நிலையில், குழுப் பரிசோதனை முறையை தமிழ்நாடு சுகாதாரத் துறை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.