சென்னை:கடந்த ஜனவரி, 2021 மாதத்தை ஒப்பிடுகையில், சென்னையில் திருவொற்றியூர், மாதவரம், ராயபுரம், அடையார் உள்ளிட்ட மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்தில் .82 மீட்டர் நிலத்தடி நீர் மட்டமும், மாதவரம் பகுதியில் 1.27 மீட்டரும் உயர்ந்துள்ளது.
நீர்மட்டம் உயர்வு
இதே போல ராயபுரம் மண்டலத்தில் 1.231 மீட்டரும், கோடம்பாக்கம், அடையார் மண்டலங்களில் தலா 1 மீட்டரும், வளசரவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் 0.5 மீட்டரும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில்,வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் நன்கு உயர்ந்தது. இருப்பினும் கோடைகாலத்தில் மழைப்பொழிவு இல்லை. இதனால் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் லேசாக குறைய தொடங்கியது.
விழிப்புணர்வு
கடந்த சில தினங்களாக சென்னையில் மிதமான மழை பெய்தது. இதனால் ஒரு சில மண்டலங்களில் நீர் மட்டம் உயர தொடங்கியது. " வடகிழக்கு பருவமழையின் போது நல்ல மழை இருப்பின் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. மேலும், சென்னை குடிநீர் வாரியம் மழை நீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. எனவே, சென்னையில் குடிநீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை" என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உபரி நீர்
இந்த நிலையில் சென்னையின் மெட்ரோ ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது கன மழை இருப்பின் உபரி நீரை கடலுக்கு திறந்து விட நேரிடலாம் என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : அவதூறு வழக்கில் ஹெச். ராஜாவுக்கு பிடிவாரண்ட்!