திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிடாரிதங்கல் கிராமத்தில் சட்ட விரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கக்கோரி அதே கிராமத்தைச் சேர்ந்த சிவசங்கர் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீதிமன்ற தீர்ப்பை ஒரு போதும் உள்நோக்கத்துடன் அமல்படுத்தாமல் இருந்தது இல்லை என்றும், இருந்தாலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் பிடாரிதங்கல் கிராமத்தில் உள்ள 17 சட்ட விரோத ஆழ்துளை கிணறுகளை சீல் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் காவல் துறை உதவியுடன் திடீர் சோதனை நடத்தி 130 ஆழ்துளை கிணறுகளை மூடி உள்ளதாகவும், 34 மோட்டார்களை பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, ”பறிமுதல் செய்யும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிப்பதோடு விடாமல் வாகனங்களை முடக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை வேடிக்கை பார்த்து மறைமுகமாக அனுமதிக்கக்கூடாது.
அலுவலர்கள் ஆதரவு இல்லாமல் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்க முடியாது. இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் சமமான தண்டனை வழங்க வேண்டும்” என்றனர்.
மேலும், இதே நிலைமை மாநிலத்தில் எந்த பகுதியிலும் நடக்காத வகையில் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது என்பதற்காக சட்ட விதிகளை மீற முடியாது எனக் கூறிய நீதிபதிகள், சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் வாரிய செயலாளரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தனர்.
அப்போது சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுப்பவர்கள் மட்டுமல்லாமல், உடந்தையாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, இது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழ்நாடு முழுவதும் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவது தொடர்பாக எத்தனை புகார்கள் வந்துள்ளன. அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்த விவரங்களை 2 வாரங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.