சென்னை: எல்.என்.எச் கிரியேசன் கே லட்சுமி நாராயணன் தயாரிப்பில் புதுமுகங்கள் நடிப்பில் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ள ’எஞ்சாய்’ படத்தின் சிறப்புக்காட்சி இன்று திரையிடப்பட்டது. இதில் தயாரிப்பாளர் கே. ராஜன், நடிகர் ஜி.பி.முத்து மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிறப்புக்காட்சிகள் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் கே.ராஜன், “இந்த கால இளைஞர்களுக்காக எடுக்கப்பட்ட அற்புதமான படம், எஞ்சாய். படம் ‘A’ சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், அருவருக்கத்தக்க எந்த ஒரு காட்சியும் இடம் பெறவில்லை. இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு தொலைக்காட்சி, பத்திரிகை, யூட்யூப் போன்ற நிறுவனங்களின் கைகளில் தான் உள்ளது.
’லவ் டுடே’ என்ற சின்ன படத்தை மிகப்பெரிய படமாக்கியது, மக்கள் தான். மக்களை கொண்டாட வைத்தது, பத்திரிகை நிறுவனங்கள். அதேபோல் எஞ்சாய் படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். இந்த படம் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த கால இளைஞர்களை குறித்து எடுக்கப்பட்டுள்ள படமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய ஜிபி முத்து, “படத்தை மிகவும் எஞ்சாய் செய்து பார்த்தேன். படம் நன்றாக உள்ளது. இப்படத்தில் நானும் நடிக்க வேண்டியது. ஆனால், நடிக்க முடியாமல் போனது. நட்பின் அடிப்படையில் இந்தப் படத்தை வந்து பார்த்துள்ளேன்.
நயன்தாரா நடித்திருந்த கனெக்ட் திரைப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். நயன்தாரா அருகில் அமர்ந்து படம் பார்க்கப்போகிறீர்கள் என்று சொன்னார்கள். ஆனால், அங்கு சென்றபோது பவுன்சர்கள் தடுத்து விட்டனர். என்னை வேறு எங்கேயோ உட்கார வைத்துவிட்டனர். எனவே, நான் அங்கிருந்து சென்றுவிட்டேன்” என்றார்.
இதையும் படிங்க: முன்னணி நாயகர்களுக்கு கதை தேர்வு முக்கியம் - இயக்குநர் பேரரசு