சென்னை: சமீபகாலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் வன்முறை சம்பவங்களின் ஈடுபடுவது அதிகமாகிவிட்டது. சமூக வலைதளங்களில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமீப காலமாக ஆசிரியரை மிரட்டுவது, மேசைகளை உடைப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற வீடியோக்கள் அதிகம் உலா வருகின்றன.
ஒருதரப்பு கரோனா போன்ற பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளை நடத்தாமல் இருந்ததும், சிந்தனையை மாற்றும் வகையில் விளையாட்டு, உடற்பயிற்சி உள்ளிட்டவைக்கு அனுமதி அளிக்காமல் இருந்ததுமே காரணம் என்று தெரிவிக்கிறது.
மற்றொரு தரப்பு, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது என்று ஆசிரியர்களிடம் கூறுவதும், அவர்களை சரியாக கண்காணிக்காமல் விட்டுவிடுவதுமே இதுபோன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்கிறது.
தீர்வுகள் என்ன..?
இதற்கான தீர்வுகள் குறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவர் சத்தியமூர்த்தி கூறுகையில், “இளம் பருவத்தினர் தாங்கள் செய்வது தவறு என்பதே புரியாமல் செய்துவருகின்றனர். பெரியோர்கள் போல் ஆன்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துதல், இருசக்கர வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்டவையை செய்வதால் தாங்கும் அப்படியே என்று நினைத்துக் கொள்கின்றனர்.
பெற்றோர்கள் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு தோழானாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு முக்கியம். அதேபோல பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்துவதுடன், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் கருதியும், தவறுகள் செய்தால் அளிக்கப்படும் தண்டணைகள் குறித்தும் எடுத்து கூற வேண்டும். மாணவர்கள் வீட்டில் பெற்றோர்கள் கண்காணிப்பிலும், பள்ளியிலும் ஆசிரியர்கள் கண்காணிப்பிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மாணவர்களின் கையில் செல்போன் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை மன நலப்பிரிவு மருத்துவர் சாந்தி கூறும்போது, “வளரும் பருவ வயதினர், குழந்தையும் அல்லாத, வளர்ந்தோரும் அல்லாத ஒரு பருவம். இந்த பருவத்தில் உடல் மற்றும் மூளையின் நரம்புகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்.
இதனால் முடிவு எடுக்கும் திறன் குறைவாகவே இருப்பதால், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி உடனடியாக முடிவு எடுக்கின்றனர். சமூகத்தில் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, தன்னை ஹீரோ போல் நினைத்துக்கொண்டு சில செயல்களில் ஈடுபடுகின்றனர். கரோனா தொற்று காரணமாக சிலவற்றில் தொழில்நுட்பத்தை பிரித்து பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கல்விக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நிலை இருந்தது. இந்த தொழில்நுட்பம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் புதியதானது. 3 ஆண்டிற்கு முன்னர் குழந்தைகளிடம் செல்போன் காெடுக்காமல் கண்டித்துக் கொண்டிருந்தோம். அண்மையில் செல்போன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆபாச இணையதளங்களை பார்ப்பதற்கும் வயதை நிர்ணயித்து இருந்தாலும், அதனை பார்க்க எந்த தடையும் இல்லாத சூழலே உள்ளது. எனவே வீட்டில் செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் கண்காணிக்கிறோம் என்பது தெரிந்தாலே பிள்ளைகளிடம் கோபம் உண்டாகும். அதேபோல பல வீடுகளில் படித்து அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படிப்பதற்கு தொடர்ந்து நேரத்தை செலவிடுவதால், விளையாடுவதற்கு நேரமே கிடையாது.
அதனால் வீட்டிலேயே விளையாட எண்ணி வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுவருகிறது. ஒரு செயலால் மாணவர்கள் கைத்தடல் வாங்கினால், மீண்டும் அவர்களை செய்ய வேண்டும் என்று ஊக்குவிக்கிறது. கெட்ட செயல்களும் அப்படித்தான். எனவே முடிந்த வரை நல்ல செயல்களுக்கு பாரட்ட வேண்டும். அதேவேளையில் கெட்ட செயலை கண்டிக்க மறுக்கக்கூடாது. ஆசிரியர்கள் உங்களது பிள்ளை தவறாக நடப்பதாக கூறினால், அதனை கண்டறிந்து சரி செய்ய என்ன வேண்டும்" என்றார்.
வெயில் காலத்தில் தேர்வு அறிவிப்பு கூடாது
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் இயக்குநர் தேவராஜன் கூறும்போது, “பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்தை நீக்கியது மிகப்பெரிய தவறு. இந்தப் பணியிடத்தை கைப்பற்ற வேண்டும் என்று கருணாநிதி காலத்திலேயே முயற்சி நடந்தது. இப்போது நடந்துவிட்டது.
அதனால், பள்ளிக்கல்வித்துறை சிக்கலில் மாட்டிக்கொண்டது. நல்ல வெயில் காலத்தில் தேர்வு தேதியை அறிவித்திருப்பது மாணவர்களின் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக்கூட யோசிக்காமல் அறிவித்து வருக்கின்றனர்.
ஆணையர் அறையிலேயே தினமும் மீட்டிங் என்று இயக்குநர்கள் அமர வைக்கப்படுகின்றனர். எங்கேயும் விசிட் போவதேயில்லை. மாவட்ட அளவிலும் அதிகாரிகள் விசிட் போவதை விட்டுவிட்டு டேட்டா கலெக்ட் பண்ணும் வேலையைத்தான் பார்க்கின்றனர்.
பள்ளிகளில் ஏதேனும் ஒரு விரும்பத்தகாத நிலை ஏற்பட்டால், அங்கு அதிகாரிகள் விசிட் செய்வார்கள். உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பர். இப்போது அதெல்லாம் நடக்கவில்லை. எல்லாவற்றிலும் தாமதம் ஏற்படுகிறது.
தங்களுக்கு அரசு கொடுத்திருக்கிற அதிகாரத்தைக்கூட பயன்படுத்த முடியாமல் இயக்குநர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. மாவட்டங்களில் நிர்வாகமே செயல்படாத நிலை உருவாகி இருக்கிறது. இதனை சரி செய்ய வேண்டும்” என்றார்.
மனதை எளிதாக்குவதற்கான உடற்பயிற்சி வேண்டும்
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் சங்க மாநிலத் தலைவர் தேவிச்செல்வம் கூறும்போது, “கரோனா தொற்றுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் மாணவர்களுக்கு கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். அவர்களின் மனதை எளிதாக்குவதற்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்கள் கரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது, பெரியோர்களிடமே அதிகம் நேரம் செலவழித்து தங்களையும் பெரியோர்களாக கருதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
இதனால் 11, 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களை இளநிலை உடற்கல்வி ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையும் உள்ளது. 1995ஆம் ஆண்டிற்கு முன்னர் உடற்கல்விக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு, தேர்வும் வைத்தனர். ஆனால் தற்போது உடற்கல்வி புத்தகம் வழங்காமல் உள்ளனர்.
நீதி நெறி போதனைக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதற்கான பிரிவுகள் இருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாமல் உள்ளனர். மாணவர்களுக்கு உடற்கல்வி , நீதி நெறி வகுப்பை நடத்துவதற்கு தேவையான ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும். அப்போது தான் மாணவர்களுக்கு நல்லொழுகத்தை கற்றுத் தந்து, அவர்களின் மனதை அலைப்பாயமால் கொண்டுச் செல்ல விளையாட்டையும் கற்றுத்தர முடியும்” என்றார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்