சென்னை விமான நிலையத்தில் தெலங்கனா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "நாட்டில் வன்முறை எங்கு நடந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. கேரள அரசு இதை ஒரு சாதாரண நிகழ்வாக சொல்கிறது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் எந்த இடத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதோ அதை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புலனாய்வு அமைப்பை அனுப்பி உள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை குற்றம் இல்லை என்றோ அல்லது சாதாரணமாகவோ எடுத்து கொள்ளக்கூடாது.
மாநில அரசுகளுக்கு இது போன்ற ஒரு எண்ணம் உள்ளது. குறிப்பாக ஆளுநர் மாளிகை முன்பு நடந்த சம்பவத்தையும், கேரளாவில் நடந்த சம்பவத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பதை தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும்.
எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மத்திய அரசை பொறுத்தவரை பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் தீவிரமாக இருக்கிறது. இதில் தேர்தல் அரசியல் சாயம் தேவை இல்லை" என்று கூறினார்.