சென்னை: உலக சுற்றுச்சூழல் தினம் வருகிற 5ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையை அடுத்த ஆவடிப் பகுதியில் ராணுவப் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. அங்கு தொழிற்சாலையின் வளாகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமி உடன் சத்கார் பூங்கா பகுதியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வளாகத்திற்குள் 1000 மரக்கன்றுகள் நடப்படும் எனக் கூறினார். மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக வில்வ மரம் மற்றும் அரச மரக்கன்றை ஆளுநரும், புங்கை மரக்கன்றை ஆளுநரின் மனைவி லட்சுமியும் நட்டனர். இதனைத் தொடர்ந்து, தக்ஷின் பாரத் பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் ஆளுநருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
இதனையடுத்து, ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு தையல் இயந்திரங்களை ஆளுநரின் மனைவி லட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை நமது நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது. நமது ராணுவத்தால் நாடு பெருமை கொள்கிறது.
ஒரு நாட்டிற்குத் தேவையான ராணுவ பலத்தின் அறம் மற்றும் தேவை குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் கூறி உள்ளார். சமஸ்கிருதத்திலும் வலிமையான ராணுவ பலத்தின் தேவை குறித்து கூறப்பட்டு உள்ளது. ஒரு நாட்டில் வலிமையான ராணுவம் இல்லையென்றால், அந்தநாடு எதிரிகளால் சூழப்படும் என சுக்கிராச்சாரியர் கூறி உள்ளார்.
மரம் நடுவது குறித்தும், காலநிலை பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்தும் கவனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளையானது அதிக அளவில் சமூக சேவைகள் புரிந்து வருகிறது. நமது ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த மன அழுத்தமான சூழலில் பணியாற்றி வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை அத்தகைய மன அழுத்தம் மிக்க சூழலில் இருந்து வெளிக்கொண்டு வருவது, கையாள்வது குறித்து மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டுகிறது. உலகம் அதிக அளவில் காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
நமது தாய் பூமி அதிகளவில் வெப்பமடைந்து வருகிறது. பனிப் பாறைகள் உருகுகின்றன. ஆறுகள் வற்றி வருகின்றன. காடுகள் வறண்டு வருகிறது என்பதெல்லாம் நாம் அறிந்ததே. உலகில் அடுத்த சில பத்தாண்டுகளில் கடல் மட்டம் உயர்வதால், சில தீவு நாடுகள் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் சூழலில் தங்கள் நாட்களை எண்ணி வருகின்றன.
கடல் மட்டம் உயர்வதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. நூற்றாண்டு காலமாக குளிர்பிரதேசமாக இருந்த பகுதிகள் வெப்ப அலைகளை உணர்ந்து வருகின்றன. பாலைவனங்கள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான ஏராளமான நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளைப் பார்த்து ஆற்றல் பயன்பாட்டை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவது நேர்மையான முறை அல்ல.
நமது நாடு பூமியையும், அதில் உள்ள மலைகளையும், ஆறுகளையும் வளங்களாக பார்க்கவில்லை. அவற்றை நம்மைப் போன்ற ஒன்றாகத் தான் பார்க்கிறோம். இதுதான் நமது பழங்கால சனாதான சமூக அமைப்பு. பூமியில் உள்ள மனிதர்கள், உயிரினங்கள் உள்ளிட்டவை அனைத்தும் பூமித்தாயின் குழந்தைகளாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இவை அனைத்தும் ஒரே குடும்பமாக உள்ளது.
இதனைத்தான் தமிழ் மொழியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என கூறுகிறோம். இந்த உலகம் மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கிய ஒரே குடும்பம். மேலைநாட்டு சிந்தனை மற்றும் தாக்கத்தால், கல்வி முறையால் நாம் நமது பாரம்பரியத்தை மறந்து வருகிறோம்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் மரம் வெட்ட செல்பவர் மரங்களை வெட்டுவதற்கு முன்னால், மரத்திடம் உன்னை வெட்டுவதற்கான தேவை என்னிடம் உள்ளது என்று கூறி மரத்திடம் மன்னிப்பு கேட்பார். மரத்தில் ஒரு புனிதத் தன்மை உள்ளதை இதில் காண முடிகிறது.
ஆரம்பம் முதலே, அனைத்து உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்திலும் இணக்கத்துடன் இருப்பது நமது மரபணுவில் கலந்தது. இவை அனைத்தும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக, இளம் தலைமுறையினரிடம் இவை வலியுறுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
நவீன கல்வியமைப்பால் இவை அனைத்தும் நமது இளம் தலைமுறையினரிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது. சுற்றுச்சூழல் உடன் இணைந்து வாழும் சமூக அமைப்பு குறித்து நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நமது பாரம்பரியம் பற்றி இளம் தலைமுறையினரிடம் நாம் பேச வேண்டும். நமது நாடு உலகத்துக்கு வழிகாட்டு வருகிறது.
காலநிலை மாற்றம், பொருளாதார வளர்ச்சி, அவசரகால சூழலை கையாள்வது குறித்து உலகத்துக்கே வழிகாட்டி வருகிறது. இந்தியா தற்போது ஜி20 மாநாட்டிற்கு தலைமை தாங்கி வருகிறது. சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறை குறித்து கூறுவதற்கு இது சரியான தருணம்.
சுற்றுச்சூழலுடன் இணைந்து வாழும் நமது வாழ்க்கை முறையை உலகுக்கு காட்டும் தினமாக இருக்க வேண்டும். ஒரு திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால், அது அனைவராலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசு மட்டும் தனியாக எதனையும் சாதிக்க முடியாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஆடல் பாடல் நிகழ்ச்சிகளா..இரவு 10 மணிக்கு மேல் அனுமதியில்லை' - டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு