இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளவில் புகையிலைப் பழக்கம் பெரும் தீங்காகவும், பேராபத்தாகவும் மாறி வருகிறது. குறிப்பாக புகையிலைப் பழக்கத்திற்கு சிறுவர்களை அடிமையாக்கும் வகையில் வெகுமக்கள் ஊடகங்கள் ஒளிபரப்பும் மறைமுக விளம்பரங்கள் மிகவும் ஆபத்தானவை.
அவை தடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் திடல்களில் புகையிலை விளம்பரம், விளையாட்டுப் போட்டிகளின் நேரலையில் புகையிலை விளம்பரங்களை திட்டமிட்டு காட்டுவது, புகையிலை பயன்பாட்டை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தொடர்ந்து ஒளிபரப்புவது, திரைப்படங்களில் நடிகர்கள் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளை அமைப்பது உள்ளிட்டவற்றின் மூலம் புகையிலைப் பொருள்களை பயன்படுத்த வேண்டும் என்ற ஆவலை சிறுவர்களிடம் புகையிலை நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன.
திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை பார்த்து தான் 53 விழுக்காட்டினர் புகைப்பழக்கத்துக்கு ஆளாகின்றனர் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கரோனா அச்சம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி ஒளிபரப்புத் தளங்களில் ஒளிபரப்பாகும் திரைப்படம், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுவதில்லை.
அதேபோல், ஓசூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல நகரங்களில் ஐ.டி.சி உள்ளிட்ட நிறுவனங்கள் புகையிலை விளம்பரங்களை காட்சிக்கு வைத்துள்ளன. அவைப் புகையிலைப் பழக்கத்திற்கு சிறுவர்களை அடிமையாக்கும். மறைமுக விளம்பரங்கள் மூலமாக சிறுவர்கள் மீது புகையிலைப் பொருள்கள் திணிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு ஆண்டும் அப்பாவிகள் உள்ளிட்ட லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதற்கு முடிவு கட்ட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கு