சென்னை: விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த முனைவர் முருகானந்தம், தமக்கான ஊதியம் வழங்கப்படாததால் ஏற்பட்ட வறுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக உயிரிழந்திருக்கிறார். கல்வி செல்வத்தில் திளைத்த ஒருவர், செல்வ குறைபாட்டால், அதுவும் தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " அரியலூர் மாவட்டம் கீழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். வரலாற்றுப் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர், விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்ததால் 49 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சொந்த ஊரில் வயது முதிர்ந்த தாயை கவனித்துக் கொள்ளும் கடமையும் அவருக்கு இருந்தது. அதனால், விழுப்புரத்தில் தனியாக அறை எடுத்துத் தங்கி பணியாற்றி வந்த அவர், தமது ஊதியத்தில் ஒருபகுதியை சொந்த ஊரில் வாழும் தாயாருக்கு அனுப்பி வந்தார்.
பொருளாதார நெருக்கடி
ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி இப்போது வரை ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வந்தார். தமக்குத் தெரிந்த அனைவரிடமும் கடன் வாங்கியிருந்த முருகானந்தம், அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லை என்பதாலும், தாய்க்கு பணம் அனுப்ப முடியவில்லை என்பதாலும் கடுமையான மன உளைச்சலில் இருந்தார்.
மன உளைச்சல் மற்றும் மன அழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரித்ததால் மயங்கி விழுந்த முனைவர் முருகானந்தத்தை அவரது நண்பர்கள் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவரது மரணத்திற்கு ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது தான் காரணம் என்று அவருடன் பணியாற்றும் மற்ற கவுரவ விரிவுரையாளர்கள் குற்றஞ்சாற்றியுள்ளனர். அக்குற்றச்சாட்டு உண்மை என்று நம்புவதற்கு எல்லா ஆதாரங்களும் உள்ளன.
தகுதிக்கு ஏற்ற பணி கிடைத்திருந்தால் வசந்தம் வீசியிருக்கும்
கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி வந்த முருகானந்தம், வரலாற்றுப் பாடத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அவரது தகுதிக்கு ஏற்ற பணி கிடைத்திருந்தால், அவரது வாழ்க்கையில் வசந்தம் வீசியிருக்கும். ஆனால், கவுரவ விரிவுரையாளர் பணி மட்டுமே கிடைத்ததால், அதற்கு வழங்கப்படும் சொற்ப ஊதியத்தைக் கொண்டு அடிப்படைத் தேவைகளைக் கூட அவரால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. அத்தகைய சூழலில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊதியமும் வழங்கப்படாததால் அவரது வாழ்க்கை நரகமானது. உணவு கூட கிடைக்காமல் அவர் தவித்ததாகக் கூறப்படுகிறது.
முனைவர் முருகானந்தமும், அவருடன் பணியாற்றும் மற்ற கவுரவ விரிவுரையாளர்களும் கடந்த செப். 21 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தாங்கள் அனுபவித்து வரும் துயரம் குறித்து கூறியுள்ளனர். அவரும் அவர்களின் ஊதியத்திற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும், அவரது துயரம் தீராததால் முருகானந்தத்தின் மன உளைச்சல் கடுமையாக அதிகரித்தது. அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தமே அவரைக் கொன்றுவிட்டது.
தினக்கூலி தொழிலாளர்களை விட ஊதியம் குறைவு
முனைவர் முருகானந்தம் உயிரிழப்பதற்கு முன் எத்தகைய சூழலில் இருந்தாரோ, அத்தகைய துயரத்தில் தான் 108 நேரடி அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 4 ஆயிரத்து 83 கவுரவ விரிவுரையாளர்களும், பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ள 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 1,500 கவுரவ விரிவுரையாளர்களும் உள்ளனர்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரூ.10 ஆயிரம் மட்டுமே மாத ஊதியமாக வழங்கப்பட்டது. பின்னர் அது ரூ.15 ஆயிரமாகவும், நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதியம், அமைப்பு சாரா தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட மிகவும் குறைவு ஆகும். அதிலும் ஆண்டுக்கு 11 மாதங்கள் மட்டும்தான் ஊதியம் வழங்கப்படுகிறது. இத்தகைய மோசமான சூழலில் பணியாற்றும் அவர்களுக்கு ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் அவர்களால் எப்படி வாழ முடியும்?
மனித உரிமை மீறல்
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியமாக ஹரியானாவில் ரூ.53 ஆயிரம், கேரளாவில் ரூ.43 ஆயிரத்து 750 வழங்கப்படுகிறது. ஆனால், முற்போக்கு மாநிலமான தமிழ்நாட்டில் அதில் பாதிக்கும் குறைவாக ஊதியம் வழங்குவதும், ஐந்து மாதமாக ஊதியத்தை நிலுவை வைத்திருப்பதும் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும்.
மேலும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைப்படி ரூ.50 ஆயிரமாக உயர்த்த வேண்டும். ஐந்தாயிரத்து 583 கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ஐந்து மாத ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். இவர்களில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்த கல்வித்தகுதி கொண்டவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கும் தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகள் கோரிக்கை