சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகளில் டிசம்பர் 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜனவரி 21ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அப்போதிலிருந்து கல்லூரிகளும், விடுதிகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
ஆனால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதால் அவற்றை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முதல் ஆயிரத்திற்கும் குறைவாக இருந்த கரோனா பாதிப்பு, கடந்த 19ஆம் தேதி முதல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மார்ச் 22ஆம் தேதி முதல் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், வைரஸைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பள்ளிகளை தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து உயர் கல்வித் துறையிடம் அரசு அறிக்கை கேட்டுள்ளது.
கல்லூரிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதை கருத்தில் கொண்டும், உயர்கல்வித்துறைகளின் நேரடி வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.