சென்னை: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுதோறும் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்கு நடுக்கடலில் உள்ள பாறையின் மீது அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதனை அடுத்துள்ள பாறையில் உள்ள 133 அடி உயரத் திருவள்ளுவர் சிலையும் சுற்றுலாப் பயணிகளின் முதன்மையான ஈர்ப்பாகும்.
இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தால் 3 படகுகள் இயக்கப்படுகின்றன. கடலின் குறைந்த நீரோட்டம், கடல் சீற்றம் மற்றும் புயல் காற்று போன்ற காலங்களில் திருவள்ளுவர் சிலைக்குப் படகு போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. எனவே இந்த பிரச்சினையைத் தீர்க்க 37 கோடி ரூபாய் செலவில் கண்ணாடியிழை பாலம் அமைக்கத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்படி 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்ட கண்ணாடியிழை கேபிள் பாலம் அமைக்கப்படும். மேலும் பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள், நடைபாதையின் ஓரத்திலும், கீழேயும் உள்ள கண்ணாடி வழியாகக் கடல் அலைகளை ரசிப்பதற்கு ஏதுவாக திட்டமிடப்பட்டது.
இந்த நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளத் தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கான திட்டச் செலவு 37.818 கோடி ரூபாய் ஆகும். இந்த முழு திட்டச் செயல்பாடுகளையும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்குப் பரிந்துரைக்க, தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, பணிகள் நடைபெறும் இடத்தில் வெடி வெடிப்பு நடத்தக்கூடாது. பாறைப் பகுதிகளில் துளையிடும் செயல்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். புயல் உள்ளிட்ட சூறாவளிக் காற்றின் வேகத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளுவரின் சிலை மற்றும் விவேகானந்தர் பாறை அழகியல் அம்சங்களைப் பாதிக்கக் கூடாது. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: புதுப்பொலிவு பெற்ற குமரி திருவள்ளுவர் சிலை.. கழுகு பார்வை வீடியோ!