சென்னை: ஜெய்ப்பூர் திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழ் சினிமா சார்பில் இரவின் நிழல், மாமனிதன், விசித்திரன் உள்ளிட்ட படங்கள் பங்கேற்கின்றன. இந்த விழாவின் அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் கங்கை அமரன், பார்த்திபன், சீனு ராமசாமி, ஆர்கே.சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கங்கை அமரன், ”முதன் முதலில் நான் செந்தூரப்பூவே பாட்டு எழுதினேன். அந்த பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது. செந்தூரப்பூவே என்று ஒரு பூவே இல்லை. இல்லாத பூவுக்கு தேசிய விருது கிடைத்தது. விருதுக்கு வருகின்ற படங்கள் எல்லாமே வாழ்வியலை பற்றி எடுக்கப்பட்ட படங்கள்தான். இயல்புக்கு அற்ற படங்களை நாங்கள் பார்ப்பதில்லை. வாழ்வியல் பேசும் படங்கள் நிச்சயம் வெல்லும்.
தேசிய விருது கமிட்டியில் ரத்த சொந்தங்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடாது என்பார்கள். எப்படியோ தாரை தப்பட்டை படத்திற்காக இளையராஜாவுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டது. காரணம் அப்படம் முழுவதும் கிராமிய இசைக்கருவிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதுவும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் இசை மெய்சிலிர்க்க வைத்தது.
இதைவிட இசைக்கு என்ன தேவை என்று சண்டை போட்டுத்தான் இளையராஜாவுக்கு அப்படத்திற்கு விருது வாங்கினோம். அதுவும் இல்லாமல் அது இவரின் 1000வது படம். அவரை அங்கீகரிக்க வேண்டும் என்று, தம்பி என்று இல்லாமல் ஜூரி என்ற முறையில் அவருக்கு வழங்கினோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வடிவேலு குரலில் "பணக்காரன்" பாடல் வெளியானது