சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் நேற்று (செப்.17) இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது (செப். 18) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பூஜைப் பொருள்களை வாங்க கோயம்பேடு சந்தைக்கு ஏராளமானோர் படையெடுத்து உள்ளனர்.
மேலும், விநாயகர் சதுர்த்தி தின விழா விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால், கோயம்பேடு பகுதி மட்டுமின்றி மாநகரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வழங்கிய இஸ்லாமியர்கள் - கிருஷ்ணகிரியில் நெகிழ்ச்சி !
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலையில் இருந்து விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பல முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போன்று தேங்கி இருந்ததால், கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
மேலும், சொந்த ஊர்களுக்குச் செல்ல பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வருவதால் மதுரவாயல் சாலை பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் பயணிகள் பேருந்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டன. இதனால், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தினறினர்.
காவல் துறை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், பயணிகளின் கூட்ட நெரிசலையும், போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மேலும் இரவு நேரங்களிலும் அதிகப்படியான பயணிகள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் கோயம்பேடு, மதுரவாயல், பெருங்களத்தூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் சொந்த ஊர் செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையும் படிங்க: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளுக்கு தடை; கலெக்டரின் மேல்முறையீட்டில் நீதிபதிகள் உத்தரவு!