சென்னை: சூளைமேட்டைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் மத்தியக் குற்றப்பிரிவு சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்தார். அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் பெட்டிங்கிற்காக பணத்தைக் கட்டி சுமார் 87 லட்சத்தை இழந்து தான் ஏமாந்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
மக்களை ஏமாற்றி பணம்
அவரது புகாரின் பேரில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் விளையாடுவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்த பின்பு, பெட்டிங்காக அதனை மாற்றி தொடர்ந்து விளையாட செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவது தெரியவந்தது.
தந்தையின் வழியில் சூதாட்டத் தொழில்
அதனடிப்படையில் பணப் பரிவர்த்தனை நடந்த வங்கிக் கணக்கை வைத்து சைபர் கிரைம் காவலர்கள் நடத்திய விசாரணையில், மகாபலிபுரத்தில் தனியார் ஹோட்டலில் குற்றவாளிகள் பதுங்கி இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், அந்நபர் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பதும், அவர் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு ஆன்லைன் சூதாட்ட புக்கி தொழிலை கையில் எடுத்ததும் தெரியவந்தது.
மேலும், ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டு மேட்ச் பெட்டிங்கிலும் புக்கியாக அவர் செயல்பட்டு 25 முதல் 30 நபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
தந்தையின் தொழிலுக்கு புத்துயிர் கொடுத்த மகன்
தன் தந்தை ஆன்லைன் சூதாட்டத் தொழிலில் நீண்ட காலமாக ஈடுபட்டு காவல் துறையில் சிக்காமல் லட்சக்கணக்கில் சம்பாதித்ததால், அதேபோல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி தந்தையின் தொழிலை ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர் குணால் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். எட்டு மாதத்திற்கு முன்பு இவரது தந்தை இறந்த பிறகு அவரது செல்போனில் இருந்த ஆன்லைன் சூதாட்டம் விளையாடும் நபர்களின் தொலைபேசி எண்களை வைத்து ஆன்லைன் சூதாட்டத்தை மீண்டும் நடத்தியுள்ளார்.
சூதாட்டத் தொழில்
மேலும், தான் படித்த பிடெக் பொறியியல் படிப்பு மற்றும் தனது சகோதரரின் முதுகலைப் படிப்பு அறிவையும் வைத்து ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளார். கிரிக்கெட் போட்டி, குதிரைப் பந்தயம், கால்பந்து என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மீது ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தேவையான ஆன்லைன் செயல்முறை நடவடிக்கைகள், பதிவு செய்வது, உறுப்பினராவது என அனைத்தையும் ஹரிகிருஷ்ணன் மேற்கொண்டு வைத்திருந்ததாகவும், ஆன்லைனில் சூதாட்டம் ஆட விரும்புபவர்கள் பணத்தை மட்டும் முதலீடு செய்தால் போதும், பிரச்னை வந்தாலும் சிக்கிக் கொள்ள மாட்டார்கள் என்றும் ஆசை வார்த்தை காட்டி இந்த சூதாட்டத்தை அரங்கேற்றியுள்ளார்.
தங்க, வெள்ளி நகைகள்
பணத்தை வைத்து சூதாடுபவர்கள் ஐந்து விழுக்காடு கமிஷனை ஹரி கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டியது கட்டாயம். பணம் ரொக்கமாகவும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்தலாம், சூதாட்டம் நடத்தும் ஹரிகிருஷ்ணன், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை வைத்தும் ஆன்லைன் சூதாட்டம் செய்யும் அளவுக்கு கருவிகளை வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக தங்க நகைகளை வைத்து விளையாடும் நபர்களின் நகைகளை அளப்பதற்காக பிரத்யேகமாக தங்கம் அளக்கும் கருவிகளை வைத்து எவ்வளவு கேரட் தங்கம் மற்றும் எடை என கணக்கீடு செய்து ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தியுள்ளனர்.
கைவிட்ட அதிர்ஷ்டம்!
எனினும், பொறியியல் பட்டதாரியான ஹரிகிருஷ்ணன், உழைப்பை நம்பாமல் தன் அதிர்ஷ்டத்தை அதிகமாக நம்பி அதிக அளவு பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இந்த சூதாட்டத்தை நடத்தியதும் தெரிய வந்துள்ளது. ஐந்து என்ற எண்ணில் தன்னுடைய செல்போன் எண், சொகுசு காரின் எண் மற்றும் சூதாட்டம் ஆடும்போதும் ஐந்து என்ற எண் வந்தால் அதிகம் பணம் வைத்து சூதாடுவது என்ற அடிப்படையில், தன் படிப்பை நம்பாமல், அதிர்ஷ்டத்தை நம்பி ஆன்லைன் சூதாட்டம் ஆடியதாக ஹரி கிருஷ்ணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது இறுதியாக நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டை வைத்து லட்சக்கணக்கில் சூதாட்டம் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எந்த அணி வெற்றி பெறும் எந்த அணி தோற்கும் என பணம், நகை ஆகியவற்றை வைத்து விளையாடியுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், 24,68,300 பணம், ஆறு கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள், 10 செல்போன்கள், ஒரு ஐபேட், ஒரு லேப்டாப், குற்ற செயலுக்குப் பயன்படுத்திய சொகுசு கார் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனை நீதிமன்றக் காவலில் அடைத்தனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் கூட்டாளியாக செயல்பட்ட அவரது சகோதரர் குணால் என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உயிருக்கு ஆபத்தான நிலையில் காதல் மனைவி - மீட்டுத் தரக்கோரி எஸ்.பி.-யிடம் புகாரளித்த கணவன்