திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். அன்று முதல் பல்வேறு துறைகளில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகிறார். குறிப்பாக ஐஏஎஸ் அலுவலர்களை தொடர்ந்து அவர் மாற்றி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷை அப்பதவியிலிருந்து விடுவித்து அந்தப் பணிக்கு ககன் தீப் சிங் பேடியை தலைமை செயலாளர் இறையன்பு நியமித்தார். இன்று(மே.9) அவர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
ககன் தீப் சிங் பேடி பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்பூர் என்ற ஊரில் 1968ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பொறியியல் (மின்னணுவியல் மற்றும்மின் தொடர்பு) படிப்பை முடித்ததும் பஞ்சாப்பில் உள்ள தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார். பிறகு 1991 முதல் 1993ஆம் ஆண்டுவரை இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார். 1993ஆம் ஆண்டு ஐஏஎஸ்ஸாக தன் பணியை தமிழ்நாட்டில் தொடங்கினார்.
அதற்குப் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆட்சியராகவும், மதுரை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஆணையராகவும் பணியாற்றினார். மேலும் இவர், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், அரசு ஆட்சியாளர் மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் போன்ற துறைகளில் முக்கிய பதவியில் பணியாற்றினார். இவர் பணி சிறப்பாக இருந்ததால் 2016ஆம் ஆண்டு வேளாண் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
அனைத்துத் துறைகளிலும் இவரது பணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக கடலூரில்சுனாமியை கையாண்ட விதம், சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டங்கள் என இவரது நடவடிக்கையால் பல்வேறு தனியார் அமைப்புகள் இவளுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுபேற்று இருப்பது இவருக்கு மேலும் சிறப்பை தந்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு பணிகளுக்கு மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்!