சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. இதன் விளைவாக தனியார் பள்ளி முன்பு, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியது. இதன் காரணமாக பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்கள், காவல் துறையினரின் வாகனங்கள் என அனைத்தும் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி கேமராக்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பான வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்கக்கோரி மாணவியின் தாய் செல்வி மனுத் தாக்கல் செய்தார். இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், “கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்து விட்டது.
மேலும் மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த தடயவியல் துறையின் அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. எனவே வழக்கின் இறுதி அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, மாணவி மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்றக் கோரிய தாயார் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், “பதில் மனு தாக்கல் செய்யும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்” என மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு கோரிக்கை விடுத்தார்.
இருப்பினும் இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, இரு வழக்குகளின் விசாரணையையும் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். முன்னதாக உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போன் கடந்த ஜனவரி 20ஆம் தேதி காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டதாக மாணவி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
மேலும் தங்கள் தரப்புக்கு ஜிப்மர் மருத்துவக் குழுவின் பிரேத பரிசோதனை அறிக்கை வழங்கப்படவில்லை என கோரிய நிலையில், அது தொடர்பாக விசாரணை நீதிமன்றத்தை அனுகும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கு நிறைவு.. 1 மாதத்தில் இறுதி அறிக்கை..