சென்னை தண்டையார்பேட்டை இரட்டைகுழி தெருவில் வசிக்கும் இளைஞர் சுரேஷ் குமார். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்துவருகிறார். இவரிடம் திருவொற்றியூரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாபு என்பவர் அறிமுகமானார்.
ஆசைவார்த்தை கூறி ஏமாற்றம்
அவர் சுரேஷிடம் தான் வடசென்னை அனல் மின் நிலையத்தில் உதவி இளநிலைப் பொறியாளராகப் பணிபுரிந்துவருவதாகக் கூறினார். மேலும் வங்கி வேலை நிரந்தரமில்லை என்றும், அனல் மின் நிலையத்தில் நிரந்தர வேலைக்கான காலியிடங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது அனல் மின் நிலையத்தில் உள்ள வேலைக்கு 42 லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாக சுரேஷுக்கு பாபு ஆசைவார்த்தை கூறியுள்ளார். அரசு வேலைக்கு ஆசைப்பட்ட சுரேஷ் தனது தாயின் நகை, உறவினர்களிடம் கடனுக்கு பணம் வாங்கி 40 லட்சம் ரூபாயை பாபுவுக்கு கொடுத்துள்ளார்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட பாபுக்கு நீண்ட நாள்கள் ஆகியும் வேலை வாங்கித் தராததால் சுரேஷ் தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு பாபுவிடம் கேட்டுள்ளார். அதற்கு பாபு அந்த வேலை கிடைக்க இன்னும் சில நாள்கள் ஆகும் எனக் கூறினார்.
மேலும் இருவரும் ஒன்றிணைந்து ஸ்கிராப் பிசினஸ் செய்தால் நமக்கு நிறைய லாபம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி சுரேஷிடம் கூடுதலாக 42 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இதையடுத்து சுரேஷும் மின்வாரியத்தில் வேலை கிடைத்துவிடும் என்ற ஆசையிலும் பிசினஸில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையிலும் பணத்தை ஏற்பாடு செய்துள்ளார்.
தலைமறைவு
அதன்படி பணத்தை பாபுவிடம் 2016 - 2017 ஆகிய ஆண்டுகளில் சுரேஷ் ரூ.82 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். இதனையடுத்து சுரேஷுக்குப் பணமும் வேலையும் கிடைக்காததால் பாபுவிடம் பணம் கேட்டுள்ளார். பாபுவோ சுரேஷுக்குப் பணம் கொடுக்காமல் தலைமறைவானார். தொடர்ந்து சுரேஷ் தலைமறைவான பாபுவைத் தேடிவந்தார்.
இந்த நிலையில், பாபு எர்ணாவூர் கேட் அருகே ஒரு வீட்டில் தனது மனைவி மாமனார் உள்ளிட்டோருடன் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் தனது தாயாருடன் சென்று பாபுவிடம் தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
அதற்கு பாபு பணம் தர முடியாது எனக் கூறி சுரேஷை அங்கிருந்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் செய்வதறியாத சுரேஷ் தனது தாயாருடன் அவர் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
குடும்பத்தினரிடம் காவல் துறை விசாரணை
இது குறித்து தகவலறிந்த எண்ணூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ், அவரது தாயாரிடம் விசாரித்தனர். மேலும் பாபுவின் மனைவி, அவரது மாமானாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், பாபு ஏற்கனவே 2018ஆம் ஆண்டு மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக எண்ணூரைச் சேர்ந்த ஜெகன் என்பவரிடம் 18 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 'டிக் டாக்' பிரபலங்களை ஆபாசப் படம் எடுத்து பணமோசடி; ஒருவர் கைது!