ஆன்லைன் கந்துவட்டி கடன் காரணமாக நாளுக்கு நாள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, ஒரு மாதமாக ஆய்வு நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பெங்களூருவில் செயல்படும் ‘கிண்டல் டெக்னாலஜி’ என்ற நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களை வேலைக்கு வைத்து செயலி மூலம் கடன் கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், பெங்களூரு விரைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வந்த பெங்களூருவைச் சேர்ந்த பிரமோதா, பவான் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
எம் ரூபி (M RUPEE) போன்ற லோன் செயலியை உருவாக்கி, இந்நிறுவனத்திற்கு பின்புலமாக செயல்பட்ட சீன நாட்டைச் சேர்ந்த ஜியா யமாவ் (Xioa Yamao) (38), (யுவான் லூன்) Wu Yuanlum (28) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மூளையாக செயல்படும் சீனர்:
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்கள் எல்லோருக்கும் மூளையாக இருந்து, பெங்களூருவில் உள்ள கால் சென்டர், அதன் இயக்கங்கள் அனைத்தையுமே சீன நாட்டிலிருந்தபடியே ஹாங்க் என்பவர் கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். இந்த இயக்கங்கள் அனைத்துமே டிங் டாங் என்ற ஒரு செயலி மூலமாக ஹாங்க் தினமும் கண்காணித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இந்தச் செயலிகளை பயன்படுத்தத் தேவையான தொலைத் தொடர்புகளை குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடன் செயலிகளில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை ஆய்வு செய்ததில் குரோம்பேட்டை பகுதியில் இயங்கி வரக்கூடிய அசகாஸ் சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் சிம்கார்டுகள் வாங்கப்பட்டது தெரியவந்தது.
இந்த நிறுவனத்தின் இயக்குநரான திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் (30), குரோம்பேட்டையைச் சேர்ந்த முத்துகுமார் (28), கணேஷ் குமார் ஆகியோர் செயல்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
சிம் கார்டுகள் வழங்கியவர்கள் கைது:
இதைத்தொடர்ந்து மனோஜ்குமார், முத்துக்குமார் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தனியார் நிறுவனங்களுக்கு வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட பணிகளை செய்துவந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிய நிறுவனம் ஆரம்பித்து நடத்தி வருவதாகவும், இதேபோல் பெங்களூரு கிரி நகரிலும் ஒரு நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பேஸ்புக் மூலம் ரியா குப்தா என்ற பெண்மணி பழக்கமாகி ஆயிரத்து 100 சிம்கார்டுகள் வாங்கி தரக்கூறி, அதற்கேற்ப கமிஷனை கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பி தங்களது நிறுவன பெயரில் ஆயிரத்து 100 சிம்கார்டுகளை வாங்கி, சீன செயலிகளின் பயன்பாட்டிற்கு வழங்கியதாக தெரிவித்தனர்.
மேலும், எந்தவிதமான விசாரணையும் செய்யாமல் செயல்முறைகளை பின்பற்றாமல் சிம்கார்டுகளை வழங்கியதாக வோடபோன் நிறுவனத்தின் விநியோகஸ்தரான பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ், விற்பனை மேலாளர் சிகாசுதீன் ஆகியோரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் கடன் மோசடி: சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட 1,600 சிம் கார்டுகள்