சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர், ஜாய்ஸி விக்டோரியா(55). B.SC பட்டதாரியான இவர், பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் JOYCE INFRA TECH ( P) LTD என்ற பெயரில் டிரேடிங் மார்க்கெட்டிங் (TRADING MARKETING) கம்பெனியைத் தொடங்கி உள்ளார். அந்த கம்பெனி மூலம் வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதாகவும், இந்த நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்திற்கு 2.5 லட்சம் வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த மார்க்கெட்டிங் வேலையில் ஜாய்ஸி விக்டோரியாவின் கணவர் பிராங்கலின்(65), மருமகன் ஜோன் இன்பேன்ட் சேவியர்(33) மற்றும் மகள் மெர்லின் கிரிஸ்டோ(28) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சேர்ந்து 100க்கணக்கான வாடிக்கையாளர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை, போர்ச்சுகீசிய சர்ச் தெரு முத்தியால் பேட்டையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “ஜாய்ஸ் விக்டோரியா என்பவர் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் என்று 10 மாதத்தில் 2.5 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். அதனை நம்பி கடந்த 2022 நவம்பர் 18ஆம் தேதி 21 லட்சம் ரூபாய் ஜாய்ஸ் விக்டோரியாவிடம் கொடுத்தேன்.
மேலும், சில நாட்கள் கழித்து 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். மொத்தம் 26 லட்சம் ரூபாய் கொடுத்த எனக்கு திரும்ப 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை” என தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரோடு சேர்ந்து மேலும் 50 பேர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தற்போது அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சுமார் ரூ.50 கோடிக்கு மேல் மோசடி செய்த ஜாய்ஸி விக்டோரியா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தினர் 4 பேரையும் மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதற்கு முன் காவல் நிலையத்தில் அவர்களை கைது செய்யக் கோரி நூற்றுக்கணக்கானோர் புகார் கொடுக்க வந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: அண்ணன் பிறந்தநாளில் கேக் சாப்பிட்டு உயிரிழந்த தம்பி!