சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய ஜெயக்குமார், ''மாவீரன் அழகு முத்துகோன் இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்டவர். அழகு முத்துகோன் வீரத்தை பறைசாற்றும் வகையில், அவருக்கு சிலை அமைத்தது ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தான். டெல்லியில் வரும் 18ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதன்படி, வருகின்ற 18ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கு பெறுவார்.
இதையும் படிங்க: EPS பெயர் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் - OPS கொடுத்த அந்த ரியாக்ஷன்!
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி, கொடி மற்றும் சின்னம் என்பது அதிமுகவிற்கு மட்டும் சொந்தமானது. இனிமேல், அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் அது மோசடி. அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' எனக் கூறினார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது குறித்து பதிலளித்த ஜெயக்குமார், ''கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்தது அதிமுக அரசுதான். வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது கரோனா பரவியதால் நீதிமன்றத்தில் ஓராண்டு வழக்கு விசாரணை தடைப்பட்டது.
பின்னர் வழக்கு விசாரணை நடந்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. கோடநாடு வழக்கில் அதிமுகவுக்கு இருக்கக்கூடிய ஒரே கேள்வி கோடநாடு குற்றவாளிகளை திமுக வழக்கறிஞர்கள் ஜாமீனில் எடுத்தது ஏன்? என்பது தான்'' எனக் கூறினார்.
இதையும் படிங்க: EPS; அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம்