சென்னை: இந்தியாவில் தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தேசிய கல்விக்கொள்கைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த தமிழக அரசு, தமிழ்நாட்டிற்கு என தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவித்தது.
அதன்படி, கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தமிழ்நாட்டிற்கான தனி கல்விக்கொள்கை தொடர்பாக பல தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அறிந்தது. கல்வியாளர்கள், அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு தனித்துவமான கல்விக் கொள்கையை இறுதிச் செய்யும் பணியை மேற்கொண்டனர். குழுவின் உறுப்பினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அதனைத் தொகுத்து, குழுவின் தலைவரும், முன்னாள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியுமான முருகேசன் ஆங்கிலத்தில் 600 பக்கங்களுக்கு இறுதிச் செய்துள்ளார். அதனை தமிழில் மாெழிப்பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் தமிழ்நாடு அரசிடம் கல்விக் கொள்கை அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வடிவமைப்புக்குழுவின் தலைவரும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியுமான முருகேசன் கூறும்போது, “தமிழ்நாடு மாநிலக் கல்விக்குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து கருத்துகளை இறுதிச் செய்து உறுப்பினர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
சுமார் 600 பக்கங்கள் கொண்டதாக கல்விக் கொள்கை பரிந்துரை அளிக்கப்பட உள்ளது. ஆங்கிலத்தில் இறுதிச் செய்யப்பட்ட கல்விக் கொள்கை தமிழில் மாெழிப் பெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிந்தப்பின்னர் அரசிடம் சமர்பிக்கப்பட்டு, வரும் 2024 - 2025ஆம் கல்வியாண்டில் அமல்படுத்தப்படக்கூடும்” எனத் தெரிவித்தார்.
இந்தக் கொள்கையில் முக்கியமானவை குறித்து குழுவின் உறுப்பினர்கள் கூறும்போது, “மாணவர்களை ஒன்றாம் வகுப்பில் 5 வயதில் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். மழலையர் பள்ளிகள் வரன்முறைப்படுத்தப்பட வேண்டும். தனியார் பள்ளிகள் வணிக நோக்கத்துடன் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களுக்கான பாடத்திட்டம் உருவாக்குதல், பள்ளியின் உட்கட்மைப்பு வசதிகள் போன்றவைக்குறித்தும் தெரிவித்துள்ளோம்.
உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரையில் பல்கலைக் கழகங்களின் சட்ட விதிமுறைகளின் படி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு, பட்டங்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக ஒரு பட்டப்படிப்பினை படிக்கும் போது மாணவர்கள் இடையில் நின்றால் மீண்டும் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு வழங்கப்படகூடாது. பட்டப்படிப்பினை முடிக்காமல் இடையில் நிற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ், பட்டயம் போன்றவை வழங்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை இடம் பெற்றுள்ளது” எனத் தெரிவித்தனர்.