சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் நிகழும் கலவரத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகிலேயே மிகச் சிறந்த ஜனநாயக நாடாகவும், மதச்சார்பற்ற நாடாகவும் இந்தியா விளங்குகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மொழி, மதம், இனம், கலாசாரம் என பலதரப்பட்ட வேறுபாடுகள் இந்திய மக்களிடையே காணப்பட்டாலும், இந்தியர் என்பதிலே அனைவருக்கும் ஒற்றுமை உணர்வு உண்டு.
அதாவது, 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதை வெளிப்படுத்தும் தேசமாக நமது பாரத தேசம் விளங்குகிறது. இந்தியத் திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததற்கும், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளைக் கடந்து, நம் நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது ஒற்றுமையே. "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வே” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு வலு சேர்க்கும் வகையில், இந்திய நாடு பயணித்துக் கொண்டிருக்கின்ற இந்தத் தருணத்தில், மணிப்பூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலமாக இரு பிரிவினரிடையே சண்டை நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
மணிப்பூரில் பல நூற்றாண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த இரு சமூகத்தினரிடையே தற்போது விரிசல் ஏற்பட்டு, அங்கு ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது, வீடுகளுக்கு தீ வைப்பது, துப்பாக்கியால் சுடுவது, கோயில்களையும், தேவாலயங்களையும் எரிப்பது என பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் வெடித்துள்ளன.
இந்த வன்முறைத் தாக்குதல்களில் விவசாய நிலங்கள், வணிக வளாகங்கள், பொதுச் சொத்துகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தற்போதைய வன்முறைகளில் வசிப்பிடங்களை இழந்துள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பிற்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும், இதில் கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என்றும் கூறப்படுகிறது.
முகாம்களிலேயே, பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகள் பிறக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெறும் வன்முறைச் சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மணிப்பூரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கலவரம் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. மணிப்பூர் மாநில வரலாற்றிலேயே இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதில்லை. வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்படுவது இதுவே முதல் முறை. அனைவரும் பதற்றத்துடன் காணப்படுகிறார்கள் என்றும் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதனை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், மணிப்பூர் மாநில மக்களுக்கு, குறிப்பாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சிறுபான்மை மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமை. இதனை நிறைவேற்றும் வகையில், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலை நாட்டும் வண்ணம், பன்முகத்தன்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சமூகங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள விரிசலை நீக்கும் வகையில், இரு தரப்பு பிரதிநிதிகளையும் உடனடியாக அழைத்துப் பேசி ஒரு சுமூக தீர்வினை விரைவில் எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!