போயஸ் கார்டன் மற்றும் கஸ்தூரி எஸ்டேட் குடியிருப்புவாசிகள் நலச் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “மக்கள் மற்றும் மனுதாரர் சங்கத்தின் எதிர்ப்பையும் மீறி வேதா இல்லத்தைக் கையகப்படுத்தும் பணி தொடர்கிறது, சட்ட விதிகளை மீறி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தப் பதிலும் இல்லை. பொதுமக்களின் வரிப்பணத்தில் தற்போதைய நிதி நெருக்கடி சூழலில் இந்த நடவடிக்கை தேவை இல்லை. எனவே, இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், “2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நினைவு இல்லத்திற்கான நடவடிக்கை தொடங்கியது. இது தமிழ்நாட்டின் முதல் நினைவு இல்லம் அல்ல. காமராஜர், வ.உ.சி. உள்பட 30 தலைவர்களின் நினைவு இல்லங்கள் உள்ளன.
நினைவு இல்லங்கள் தமிழ்நாடு சுற்றுலாத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. நிலம் கையகப்படுத்த நடவடிக்கை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாகிறது. ஏற்கனவே பொது நல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மற்றொரு பகுதியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வமாக இல்லமாகவும் மாற்றுவது தொடர்பாக அரசு தீவிரமாகப் பரிசீலித்துவருகிறது. இல்லத்தைக் கையகப்படுத்தும் நடவடிக்கை இறுதி முடிவை எட்டவில்லை. அப்போது மனுதாரர்களின் குறைகள் பரிசீலிக்கப்படும்” என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிக தொண்டர்கள் உள்ளதால், தமிழ்நாடு மக்கள் அவரது இல்லத்துக்கு வருகைதந்து பார்வையிடுவதற்காக, அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு முடிவு செய்திருக்கிறது.
நினைவு இல்லமாக மாற்றுவது தமிழ்நாட்டில் புதிதல்ல. மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையில் தலையிட முடியாது. உயர் நீதிமன்ற ஆலோசனையை அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகக் கூறியுள்ளது” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.