செங்கல்பட்டு: ஆண்டுதோறும் ஜூலை 29ஆம் தேதி சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காட்டு விலங்குகளில் முக்கியமானதாகக் கருதப்படும் புலிகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காடுகளும் புலிகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே சர்வதேச புலிகள் தினமான இன்று உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்ததாகக் குறிப்பிட்டார்.
பூங்கா நிர்வாகத்தினர் பல்வேறு வகையான புலிகளை நல்ல முறையில் பராமரித்து வருவதாகவும் தமிழிசை கூறினார். மேலும், அவர் கடந்த 2010 இல் இருந்து சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுவது புலிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. இந்த பூமியில் வாழ்வதற்கு மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவு உரிமை மிருகங்களுக்கும் தாவரங்களுக்கும் உள்ளது.
இந்தியாவின் பழம் பெருமை வாய்ந்த உயிரியல் பூங்காவான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பொதுவாகவே காடுகள் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை நாம் அளிக்க முடியும்.
எனவே அனைவரும் தங்களால் இயன்ற அளவிற்கு அனைத்து உயிரினங்களுக்கும் உணவு, பாதுகாப்பு அளிப்பது என்பது இயற்கையை பாதுகாப்பதற்கு சமம் எனப் பேசினார்.