சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2024 புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், நீலாங்கரை உட்பட சென்னையில் உள்ள முக்கியமான அனைத்து கடற்கரைகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்றனர். மேலும், கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, முக்கிய கோயில்களில் அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டது. குறிப்பாக, வடபழனி முருகன் கோயில், மயிலை கபாலீசுவரர் கோயில், கந்த கோட்டம், திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயிலில்களில் அதிகாலை 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்காரமும் நடைபெற்றது.
அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, பாரிமூனை கந்த கோட்டம் முருகன் கோயிலில், தங்க நாணய கவச அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம், பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளை நடைபெற்றது.
புத்தாண்டு தினத்தில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கரோனா விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு, நடைமுறைபடுத்தப்பட்டது. மேலும், பக்தர்களுக்கு பிரசாதமாக வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை உள்ளிட்டவை நாள் முழுவதும் வழங்கப்படுகின்றன.
கோயிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்ட்டர்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெசன்ட் நகரில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோயிலில், அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இதே போல், சென்னை பாடிகாட் முனிஸ்வரர் கோயில், தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம், பத்மாவதி தாயார் சந்நிதானம், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயில், புறநகர் பகுதிகளில் உள்ளதிருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட பல கோயில்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
அனைத்து கோயில்களிலும் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சென்னையில் பிரசித்தி பெற்ற தேவலாயமான புனித சாந்தோம் தேவலாயத்தில், புத்தாண்டு தினத்தையொட்டி இரவு வண்ண மின்விளக்குகளால் அலங்காரிக்கப்பட்டிருந்தது.
புத்தாண்டு பிறக்கும் வேத பாடல் ஆலயத்தில் முழங்க 2024ஆம் ஆண்டு பிறப்பதை உணர்த்தும் பாடப்பட்டன. மேலும். இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப்பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்) ஆகிய தேவலாயங்களில், சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
இதையும் படிங்க: நடிகர் விஜயின் அலுவலக கணக்காளர் பாலியல் புகாரில் கைது.. நடந்தது என்ன?