தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 25ஆம் தேதி முதல் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம், போராட்டத்தில் அரசு மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு மருத்துவர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள் தங்களுக்கு எந்தவித அழைப்பும் அரசிடமிருந்து வரவில்லை என மறுத்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன், ''போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசு மருத்துவர்ளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அழைப்பும் இல்லை. நாங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம்.
அரசு சார்பில் யாருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதும் தெரியவில்லை. எங்களின் கூட்டமைப்பில் 90 விழுக்காடு அரசு மருத்துவர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என அரசு விரும்பினால் அழைத்துப் பேச வேண்டியவர்களும் அதற்கான தீர்வினை கூற வேண்டியவர்களும் நாங்கள்தான். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஏற்கனவே எங்களைத்தான் அழைத்துப் பேசி ஒரு ஒப்பந்தத்தினை போட்டார்.
ஒப்பந்தமே செய்யாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவாரா என்பது பற்றித் தெரியவில்லை. எங்கள் கூட்டமைப்பில் உறுப்பினரே இல்லாத ஒரு சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகத் தெரிகிறது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறக்கூடாது என்பதெல்லாம் இல்லை. ஆனால் எங்களை அழைத்துப் பேசவேண்டிய தார்மீகக் கடமை அரசுக்கு உண்டு.
எங்களை அழைத்து பேசித்தான் தீர்வுகாண வேண்டும் என்பது இல்லை. அரசிடம் அனைத்து ஆணையும் உள்ளது. எனவே அழைத்துப் பேசாமலும் மருத்துவர்களுக்குத் தேவையான ஆணையை வெளியிட்டால் மகிழ்ச்சியடைவோம். எங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து நாங்கள்தான் அறிவிப்போம்'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி!