சென்னை: புளியந்தோப்பு நரசிம்ம நகர், 3-ஆவது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (44). பிரபல ரவுடியான இவர் மீது வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோரை கொலை செய்த வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை தவிர ஆள் கடத்தல் வழக்குள் என மொத்தம் 32-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளது.
இந்நிலையில் இன்று (ஆக 18) வழக்கு சம்பந்தமாக ஆற்காடு சுரேஷ் அவரது வழக்கறிஞருடன் எழும்பூர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது நண்பர் மாதவன் ஆகியோர் பட்டினம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட வந்து கடற்பரப்பில் அமர்ந்துள்ளனர்.
அப்போது ஆற்காடு சுரேஷை பின் தொடர்ந்து காரில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டிய போது, அதை தடுக்க வந்த மாதவனுக்கும் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் ஆற்காடு சுரேஷை சரமாரியாக வெட்டிவிட்டு காரில் வந்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஆற்காடு சுரேஷை அருகிலிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லேசான காயமடைந்த மாதவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாகப் பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிவில் சப்ளை கம்பெனியில் எழுத்தராக பணியாற்றி வந்ததும், நியாயவிலைக்கடை அரிசி உள்ளிட்ட பொருட்களை சுரேஷ் கடத்தி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் கும்பல் ஒன்றுக்கும் ஆற்காடு சுரேஷுக்கும் ஏற்பட்ட தகராற்றில் முதல்முறையாக ஆற்காடு சுரேஷ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். புழல் சிறையில் இருந்த போது ரவுடி சின்னாகேசவலு என்ற சின்னா என்பவருடன் சேர்ந்து கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.
பின்னர் ஆற்காடு சுரேஷ் பெண் தாதாவான அஞ்சலையுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்டதால் சின்னாவுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு பூந்தமல்லி நீதிமன்ற வாசலில் வைத்து ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது ஆட்கள் இணைந்து சின்னா மற்றும் அவரது வழக்கறிஞர் பகத்சிங்கை கொலை செய்து ஏரியா தாதாவாகக் கருதப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு, ரவுடி பாம் சரவணனின் தம்பி தென்னரசுவைக் கொலை செய்த சம்பவத்தில் பாம் சரவணன் என்பவருக்கும், ஆற்காடு சுரெஷுக்கும் பகை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இறந்த சின்னகேவலுவின் கூட்டாளியான ராதா என்பவரைக் கடந்த 2019ஆம் ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலை செய்துவிட்டு சிறைக்குச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
15 முறை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்ட ஆற்காடு சுரேஷ், போலீசாரின் தொடர் நெருக்கடி காரணமாக புளியந்தோப்பு பகுதியிலிருந்து வெளியேறிக் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திரா மாநிலம், திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்து தனது ஆட்களை வைத்து சென்னையில் மிரட்டல், கட்டப்பஞ்சாய்த்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் தென்சென்னை பகுதியில் பிரச்சனை உள்ள நிலங்களை விற்றுத் தருவது போன்ற வேலைகளிலும் ஆற்காடு சுரேஷ் ஈடுபட்டு வந்துள்ளார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ஆற்காடு சுரேஷ் இன்று மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் பிரபல ரவுடியை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ரவுடி தென்னரசுவின் கொலைக்காக அவரது சகோதரர் பாம் சரவணன் பழிதீர்த்தாரா அல்லது சின்னா கொலைக்காக அவரது ஆட்கள் பழிதீர்த்தனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல கோணங்களில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.