சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் காமெடி நிகழ்ச்சி, கிரிக்கெட் போட்டி தொகுப்பாளர் மற்றும் யூடியூபராக இருந்து வருபவர் சக்திவேல் ஆதி மீனா. சமீபத்தில் விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் சூர்யா கதாபாத்திரம் போல நடித்து பிரபலமடைந்தவர் சக்திவேல்.
இந்த நிலையில் சக்திவேல் நேற்றிரவு பணியை முடித்து விட்டு விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையில் இருந்த கல் ஒன்று சக்திவேலின் இடது கண்ணில் பட்டதில் படுகாயமடைந்து வலியில் சுருண்டு விழுந்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கண்ணில் சிகிச்சை பெற்ற பின்பு சக்திவேல் தனது புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ”ஹெல்மெட் போடவில்லை என்றால் 1000 ரூபாய் பைன் போடுறாங்க, சாலையில் கற்களாக இருந்து லாரி டையரிலிருந்து, கற்கள் சிதறி, கண்ணில் பட்டு காயமடைந்த போது ஹெல்மெட் அணிந்து தான் இருந்தேன்” என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சம்பவ இடத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றிருந்தால் கற்கள் தலையில் பட்டு உயிரிழந்திருப்பார்கள் எனவும், இவ்வளவு கேவலமாக அரசு அதிகாரிகள் சாலையை பராமரித்து எத்தனை நாட்கள் சாகடிக்க போறீங்க என ஆதங்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: விடிய விடிய மது விற்பனை : தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு.!