எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. மருத்துவ சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில், 218 பேர் கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருப்பிடச் சான்றிதழ்கள் தமிழ்நாட்டில் இருந்தால் மட்டும் 218 பேருக்கும் இடம் அளிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவ தர வரிசை பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றிருப்பதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தர வரிசைப்பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தொடக்கம் முதலே மருத்துவ மாணவர் சேர்க்கையில் நிலவி வரும் குளறுபடிகளின் உச்சமாக நிகழ்ந்திருக்கும் இந்த தவறை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
நீண்ட இழுபறிக்குப் பிறகு மிகவும் தாமதமாக தமிழ்நாடு ஒதுக்கீட்டுக்கான மருத்துவ தர வரிசைப்பட்டியலை இருதினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளர்கள். அந்தப் பட்டியலில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 பேர் இடம் பெற்றிருப்பதாக பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களின் பெயர்கள் தமிழ்நாடு ஒதுக்கீட்டுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம் பெற்றது எப்படி? மிகவும் கஷ்டப்பட்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாடு மாணவர்களின் வாய்ப்புகளையும் பறிக்கும் அரசின் இந்த பொறுப்பற்ற செயல் கடுமையான கண்டனத்திற்குரியது ஆகும். இதனை கவனிக்க வேணேடிய சுகாதாரத்துறை அமைச்சர் கட்சிக்கு ஆள் பிடிக்கிற வேலையில் மும்முரமாக உள்ளார். அரசும், அமைச்சரும் இப்படி இருக்கும் போது ‘நமக்கென்ன?’ என்று அலுவலர்களும் மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே, தாமதமும் இன்றி வெளி மாநில மாணவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தமிழ்நாடு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவ தரவரிசைப் பட்டியலைப் புதிதாக வெளியிட வேண்டும். அதே போன்று மருத்துவ மாணவர் சேர்க்கையில் பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிற குழப்பங்களுக்கு அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும்", என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.