சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஜனவரி 09) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பூத் கமிட்டி மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தேர்தல் ஆணையத்தோடு நடைபெறவிருந்த ஆலோசனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவிருக்கும் கூட்டத்தில் வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடிகள் மற்றும் இறந்தவர்களின் பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அதிமுக தரப்பிலிருந்து எடுத்துரைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், போக்குவரத்து சங்கங்களில் உள்ள 14 சங்கங்கள் இன்று (ஜனவரி 09) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்பது சாதாரணமான 6 கோரிக்கைகள் மட்டும் தான். தேர்தலின் போது போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் உள்ளது என அறிவித்துவிட்டு தற்பொழுது அவர்களைக் கையேந்தி நின்று பிச்சையெடுக்கும் அளவிற்குத் தள்ளியுள்ளது இந்த அரசு.
சிலை வைப்பதற்கும், பேனர்கள் வைப்பதற்கும் கருவூலத்தில் நிதி இருக்கும் பொழுது தொழிலாளர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு ஏன் கருவூலத்தில் பணம் இல்லை என கேள்வி எழுப்பினார். திமுகவின் குடும்ப கருவூலத்தில் நிரம்பி உள்ள பணத்தை எடுத்தாலே தமிழகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம். குறிப்பாக ஆசிரியர்கள் பிரச்சனை, தொழிலாளர்கள் பிரச்சனை, போக்குவரத்துத் துறை பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு புதிய பேருந்தையாவது வாங்கி உள்ளார்களா அல்லது ஒரு ஓட்டுநரையோ அல்லது நடத்துநரையோ புதிதாக பணிக்கு அமர்த்தி உள்ளார்களா? தேர்தல் வாக்குறுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் நபர்களை பணிக்கு அமர்த்துவோம் என கூறிவிட்டு தற்போது வரை ஒருவரை கூட பணிக்கு எடுக்கவில்லை. அப்படி உண்மையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேரை பணியில் அமர்ந்திருந்தால் அதற்கான கணக்கு வழக்குகளைக் காட்டுங்கள்.
மேலும், அரசுப் பணிகளில் கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு மேலாக காலி பணிகள் உள்ளன. தற்போது வரை அவை நிரப்பப்படவில்லை. ஏற்கனவே, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்ற பெயரில் நடத்தி அதன் மூலம் 25 லட்சத்திற்கும் மேலாக நபர்களுக்கு நாங்கள் வேலை வழங்குவோம் என கூறுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தற்பொழுது கூட நேரம் இருக்கிறது. பொங்கல் விடுமுறைக்கு முன்னால் கூட அவர்களுடைய கோரிக்கையை அரசு ஏற்று நிறைவேற்றலாம். இல்லையென்றால் பொங்கல் விடுமுறை அன்று வெளியூர்களுக்குச் செல்வோர் இந்த போராட்டத்தினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். அதனால், அரசினுடைய பிடிவாதத்தைக் கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
மேலும், மாவட்டச் செயலாளர்கள் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளைத் துவங்க வேண்டும். பூத் கமிட்டிகள் இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில் பூத் கமிட்டிக்களை அமைக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் விலை உயர்வு என்பது ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறாத நாளே இல்லை" எனத் தெரிவித்தார்.