சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 21 முதல் 30 ஆம் தேதி வரை காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ராயபுரம் காவல் சரகம் சார்பில் காவலர் வீரவணக்க நாள் இன்று (அக்.26) அனுசரிக்கப்பட்டது.
ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வண்ணாரப்பேட்டை காவல்துறை சரக துணை ஆணையாளர் சிவபிரசாத் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் காவல்துறை அலுவலர் ஜாங்கிட் கலந்து கொண்டு உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், "காவல்துறை பற்றி பல நல்ல தகவல்கள் வந்தாலும், சில நேரங்களில் தவறான தகவல்களும் வெளிவருகின்றன. காவலர்களின் பணி மிகவும் கடினமான பணியாகும். ஒவ்வொரு காவலரும் நேரம், உடல்நலன் பற்றி கவலைப்படாமல் காவல் பணியை செய்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு தான், நான் உடல்நிலையை கவனித்து கொள்கிறேன்.
காவலர்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள், எப்போது பள்ளிக்கு செல்வார்கள், திரும்பி வருவார்கள் என்பது கூட தெரியாமல் பணியாற்றி வருகின்றனர். இதனால் காவலருடன் அவர்களுடைய குடும்பத்தாரும் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றைய நாள் வரை மக்கள் பணியாற்றிய காவலர்கள் 36 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். நேரம், உடல் நலன் என எதையும் பாராமல் மக்கள் பணியாற்றுவதால் தான் அவர்களுடைய சேவை உயர்ந்த தியாகமாகும் (சுப்ரீம் சாக்ரிபைஸ்) " என்றார்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர்கள் உக்கிரபாண்டியன், முகமது நாசர், இருதயராஜ், ஆய்வாளர்கள் இசக்கிபாண்டியன், இளங்கோ, காவல்துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ’அலுவல் ரீதியான கடிதத்தை சர்ச்சை ஆக்குதல் சரி அல்ல...’ - தலைமைச் செயலர் இறையன்பு