சென்னை: பெருங்களத்தூர் பகுதியில் பல ஆண்டுகளாக ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 234 கோடி மதிப்பீட்டில் நான்கு தடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் செல்லும் மார்க்கமாகக் கட்டப்பட்ட ஒரு வழி மேம்பாலம் திறக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெருங்களத்தூர் நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலமும், பெருங்களத்தூர் சீனிவாசா நகர் மார்க்கமாகச் செல்லக்கூடிய மேம்பாலமும் இரண்டு ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது பெருங்களத்தூர் சீனிவாசா நகர் செல்லக்கூடிய மேம்பாலம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதம் காலமாக பணிகள் முடிக்கப்பட்டும் மேம்பாலம் திறக்கப்படாமல் பேரிக்காடுகள் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மேம்பாலத்தை அதிகாரிகள் மூடி வைத்திருந்தனர். இதனால் சீனிவாசா நகர், ஆர்.எம்.கே.நகர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தினந்தோறும் வேலை, பள்ளி, கல்லூரிக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் பெருங்களத்தூர் ரயில்வே கிராசிங்கை கடந்து செல்லும் சூழல் நிலவி வந்தது.
இதனால் பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதம் காலமாகியும் இதுவரை திறக்காததைக் கண்டித்து பெருங்களத்தூர் சீனிவாசன் குடியிருப்போர் நல சங்கத்தினர் மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்து வந்தனர். இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு கடந்த வாரம் செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் தற்போது பாலத்தில் மின்னொளி விளக்குகள் பொருத்தும் பணிகள் முழுவதும் முடிவடைந்ததைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் அவர்கள் புதன்கிழமை சீனிவாசா நகர் மேம்பாலத்தைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்க உள்ளார்.
இதற்கு ஒரு மாதம் காலமாக மேம்பாலத்தைத் திறந்து வைக்காமல் மூடி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டித்து குடியிருப்போர் நல சங்கத்தினர் தொடர்ந்து மனு அளித்து வந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மேம்படுத்தித் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் எனவும் குடியிருப்பு நல சங்கத்தினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு மார்க்கமாகச் செல்லக்கூடிய மேம்பாலப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்பட்டுத் திறக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.