சென்னை: மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும், அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும், சென்னை மற்றும் புறநகர் மாவட்ட அதிமுகவின் சார்பில் ராஜரத்தினம் மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''விலைவாசி விண்ணை தொடுகின்றது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது. எனவே, தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போராட்டம் எழுச்சியான முறையில் நடைபெற்றது.
திமுக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் எந்த தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை கொலை நகரத்தின் தலைநகரமாக மாறிவிட்டது.
மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட அத்தனை பேரும் வீதியில் நின்று போராடுகின்றனர். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக இருந்து கொண்டு அவருக்கு நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே தெரியவில்லை. மேலும் தனது குடும்பம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றும் கோடி கோடியாக கொள்ளையடித்து ஆசியாவிலேயே தனது குடும்பம் தான் பணக்கார குடும்பமாகத் திகழ வேண்டும் என்றும் இவர் செய்யும் ஊழலினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பரிதவிக்கின்றனர்'' என திமுக அரசை சாடினார்.
வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் மின்சார வரி ஆகியவற்றை உயர்த்தி மக்களின் நலன் பற்றி கவலை இல்லாமல் எங்களுக்கு ஊழல் தான் முக்கியம் என்று போலி ஆட்சி நடத்தி இன்னும் சிறிது காலத்தில் வீட்டுக்குத் திரும்ப உள்ளது திமுக அரசு எனத் தெரிவித்த ஜெயக்குமார் திமுக அரசின் அமைச்சர்கள், மருத்துவத்துறை என்றால் கூட மருத்துவமனையை எட்டிப் பார்க்காதவர்கள், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கும்போது அனைத்து அமைச்சர்களும் சென்று கவனிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.
''இப்போது செந்தில் பாலாஜி சிறை சென்றிருக்கிறார். அடுத்து பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் சிறை செல்வார்கள். ஏதோ தேசத்துக்காக போராடியவர் போல தியாகம் செய்தவர் போல செந்தில் பாலாஜிக்கு சிறைச்சாலையில் ஏர் கண்டிஷ்னர், வீட்டில் இருந்து உணவு வழங்கப்படுகிறது.
செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபொழுது தவறு நடந்துள்ளதாக அறிந்தவுடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். மேலும் செந்தில்பாலாஜி மேல் புகார் கொடுப்பவர்களிடம் இருந்து புகாரைப் பெற்று, பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூறியவர் ஜெயலலிதா'' எனத் தெரிவித்தார்.
''தன்னை அமைச்சராக்கிய திமுக அரசின் முதலமைச்சருக்கும் அவரது குடும்பத்திற்கும் தக்க விசுவாசத்தை கடந்த இரண்டாண்டுகளாக காட்டியவர் செந்தில் பாலாஜி. எனவே தான் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு கனிமொழி மற்றும் ஆ. ராசா ஆகியோரை 2 ஜி ஊழல் வழக்கில் கைது செய்த போது அமைதியாக இருந்த திமுக ஒரு ஊழல் அமைச்சர், உச்ச நீதிமன்ற ஆணையின்படி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்தபோது முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் இரவெல்லாம் தூங்காமல் மருத்துவமனையை சுற்றி சுற்றி வந்தனர். அதனைப்பார்க்கும் பொழுது, செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரிடம் தங்களுக்கு எதிராக ஏதேனும் ஊழல் குறித்த வாக்குமூலம் அளித்து விடுவாரோ என்று அஞ்சி நடுங்குவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறதாக மக்கள் பேசுகிறார்கள்'' என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்; திண்டுக்கல் சீனிவாசன் உளறல் - அதிமுகவினர் கதறல்