சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலம் மொழிப்பாடத் தேர்வு இன்று நடைபெற்றது. இந்தப் பொதுத் தேர்வினை எழுதுவதற்கு பள்ளிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் அதிகாரப் பூர்வமாக தகவல் அளிக்கப்பட்டது.
இவர்களில் தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்களும், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகளும் எழுத உள்ளனர். இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள 3976 மையங்களில் தேர்வினை எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்களும், 7655 மாணவிகளும் என 15 ஆயிரத்து 566 பேர் எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மேலும் தனித் தேர்வர்களாக 37 ஆயிரத்து 798 பேரும் எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களுக்கு இன்று நடைபெற்ற ஆங்கிலப் பாடத் தேர்விற்கான கேள்வித் தாளில் ஒரு மதிப்பெண் வினாவில் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. தேர்வுத் தாளில் 4,5,6 கேள்விக்கான விடையில் Synonyms, antonyms ஆகிய இரண்டும் இருந்து உள்ளது. இது மாணவர்களுக்கு சிரமத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில், தேர்வுத் துறை இயக்குநருக்கு, ’ஒரு மதிப்பெண் வினாவிற்கான 4,5,6 கேள்விக்கான விடையில் Synonyms, antonyms இரண்டும் இருப்பதால் மாணவர்கள் விடையளிக்க சிரமம் ஏற்பட்டு உள்ளது. இந்த வினாக்களுக்கு விடை எழுதிய அனைவருக்கும் முழு மதிப்பெண்களை வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வினாத்தாள் முறையாக பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வுத் துறை இயக்குநர் தெரிவித்து உள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கணிதப் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வியில் தவறுகள் இருந்ததும், மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முயற்சி செய்து இருந்திருந்தால் 5 மதிப்பெண்கள் வழங்கலாம் என அரசு தேர்வுத் துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும் இதுப் போன்று பிழைகள் ஏற்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதே ஆகும். மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்கிய போனஸ் மதிப்பெண் போன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் போனஸ் மதிப்பெண் கிடைக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: +2 மாணவர்களுக்கு ஜாக்பாட்.. கணித தேர்வில் இந்த கேள்விக்கு முயற்சி செய்திருந்தேலே 5 மார்க்!