சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீண்ட நாள்களாக செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். உண்மை செய்திகளை கழக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதிமுக 30 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை வழங்கியது. ஆலமரம் போல தலை தூக்கி வளர்ந்துள்ளது.
ஆனால், தற்போது இயக்கத்தைச்சிலர் தன் வசம் கொண்டுபோக நினைக்கின்றனர். 2017ஆம் ஆண்டு கட்சி பிரிந்து மீண்டும் ஒரு அணியாக இணைந்தது. அப்போது பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு சமமாக பொறுப்பு வழங்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்தனர். பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உள்ளது போல சம அதிகாரம் உள்ள பொறுப்பு உருவாக்கப்பட்டது.
எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் வகுத்த சட்டதிட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. ஓபிஎஸ்ஸுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் திருத்தம் செய்யப்பட்டது. செயற்குழுவினர் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனை பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்தது, செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஒற்றைத் தலைமை வேண்டும் என்று தொண்டர்கள், மக்கள் தெரிவித்ததாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். யார் ஒற்றைத்தலைமை வரவேண்டும் என்றுகூட கருத்துகள் பரிமாறப்படவில்லை, ஒற்றைத்தலைமை வேண்டும் என்று தான் தெரிவித்தனர். பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டும். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவை தடை விதிக்க ஒருங்கிணைப்பாளர் நீதிமன்றம் செல்கிறார்.
2017ஆம் ஆண்டில் எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ... அதேபோல தான் தற்போது ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவிலும் நடத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவிற்கு வராமல் கட்சி அலுவலகத்திற்குச் செல்கிறார் ஏன்? அங்கிருக்கும் முக்கியப்பொருட்கள், சொத்து பத்திரங்களையும் ஓ.பன்னீர்செல்வம் திருடிச்சென்றார். கட்சியின் தலைவரே இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இதுபோல செயல்படும் நபருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? ஒவ்வொரு முறையும் இதுபோல தான் செயல்படுகிறார்” எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க முடிவெடுக்கப்பட்டது. அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக 63 நபர்கள் தனக்கு ஆதரவளித்தனர். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி இருக்கும்போது மக்கள் மன நிலை எவ்வாறு இருக்கும்? 3 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைப் பறிகொடுத்தோம்.
அவரால் தான் தோல்வி ஏற்பட்டது. நான் எப்பொழுதும் கட்சியின் பொறுப்புகளுக்கு ஆசைப்பட்டது இல்லை. 1989இல் போடி சட்டப்பேரவைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது எதிராக ’வெண்ணிற ஆடை’ நிர்மலா போட்டியிட்டார். அப்பொழுது அவருக்கு ஏஜென்ட் ஆக இருந்தவர் ஓபிஎஸ். இதுவா அம்மாவின் விசுவாசம்.
பொதுக்குழு கூட்டுவதற்கு முன்பு ஒற்றைத்தலைமை வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்பதாக ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக 15 நாள்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். அப்போது ஒத்துவராத அவர் தற்போது, இணைந்து செயல்படுவோம் என்று அழைக்கிறார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. சூதாட்டம் தடை செய்வதற்கு யாராவது கருத்துக்கேட்பார்களா?’ என விமர்சித்தார்.
அப்போது இதுகுறித்து சின்ன சிந்தனை கூட இல்லாதவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: வாங்க...வாங்க...சசிகலா, டிடிவி தினகரன், ஈபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஓபிஎஸ் அழைப்பு...